பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்; பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம். சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.

அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் - பாதி சம்பளம் - கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள். ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால் கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான். கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம். மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு கும்பிடவா செய்கிறோம்? தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா? அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்? அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.

ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம் எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே! உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண் இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார். இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

இனி என்ன செய்வது?

இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத்

புதுமைப்பித்தன் கதைகள்

151