பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்பியல் நோக்கில்
புதுமைப்பித்தன் கதைகள்

ஆ. இரா. வேங்கடாசலபதி

1994இல் 'காலச்சுவடு' புதிய ஆசிரியர் குழுவின் பொறுப்பில் உயிர்ப்பிக்கப்பட்டபோது. புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளை வெளியிடத் தொடங்கியது. நான் தேடிக் கண்டெடுத்த, புதுமைப்பித்தனின் அச்சிட்ட முதல் படைப்பான 'குலோப்ஜான் காதல்' முதலான சில எழுத்தாக்கங்களே இந்த முயற்சிக்கு வித்தாயிருந்தன. பல்வேறு அன்பர்களின் உதவியோடு மெல்ல மெல்லப் புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத மற்றும் அச்சிடப்படாத படைப்புக்கள் இக்கொழு கொம்பைப் பற்றிப் படரும் கொடியாயின. ஒரு முழு நூலாக வெளியிடும் அளவுக்கு அவை இருந்தமை வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. இந்தப் பின்னணியிலேயே, புதுமைப்பித்தன் பல்வேறு புனை பெயர்களில் எழுதி, பிற பதிப்பகத்தாரால் வெளியிடப்படாத படைப்புகளைக் கொண்டதொரு தொகுப்பை வெளியிடப் புதுமைப்பித்தனின் துணைவியார், மறைந்த கமலா விருத்தாசலம் அவர்களிடம் காலச்சுவடு பதிப்பகம் அனுமதி பெற்றது. இதைப் பதிப்பிக்கும் பொறுப்பை நான் பேரார்வத்துடன் ஏற்றுக்கொண்டேன். இதன் விளைவாகத் தயாரான 'அன்னை இட்ட தீ' 1998இன் கடைசியில் வெளிவந்தது. இந்தப் பணி பல்வேறு அன்பர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் செம்மையாக நிறைவேறிய கதையை அதன் முன்னுரை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடுவது என்பது தொகுக்கப்பட்டவை எவை என்பதைக் கணக்கிடும் முயற்சியாகவே முதற் கட்டத்தில் அமைய முடியும். இந்த அடிப்படையான பணியைச் செய்வதற்கும் கூடப் புத்தகச் சந்தையில் கிடைக்கும் புதுமைப்பித்தன் நூற்பதிப்புகள் போதமாட்டா என்பது அப்போதுதான் நன்றாக உறைத்தது. 'அன்னை இட்ட தீ'யை வெளியிடும் முயற்சி அதுவரையான புதுமைப்பித்தன் பதிப்புகள் பற்றிய ஆய்வாகவே விரிந்துவிட்டது. முழுமையை நோக்கிச் செல்லும்போதுதானே பகுதிகளும் நிரப்பப் பெறும். இதன் ஒரு பகுதியாகவே புதுமைப்பித்தன் படைப்புகளின் காலவரிசைப் பட்டியலைத் தயாரித்துக்கொண்டு வரலானேன். இதற்கென அவர் எழுதிய இதழ்களை எல்லாம் தேடி எடுக்க வேண்டியிருந்தது.

புதுமைப்பித்தன் படைப்புகள் அண்மைக்காலம் வரை அச்சாகி வந்த முறை தமிழ் இலக்கிய உலகில் அவருக்குள்ள இடத்திற்குச் சற்றும் பொருந்துவதாக இல்லை. தாறுமாறாகவும், பிழை மலிந்தும்,

15