பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுக்காப்புளி மரம்

நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.

நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் - உருவத்தையும் மாற்றிக் கொண்டு - செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். அதற்கு வேறு இடம் இருக்கிறது. ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? இதில் ஒன்றும் அவசியமில்லை.

அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அதாவது அங்கு வசிப்பவர்கள் என்றால், அவர்களுடைய வீடு என்ற ஹோதாவில் ஒரு குடிசை; சில இடத்தில் ஓட்டுக் கட்டிடம் கூட இருக்கும். முக்கால்வாசி சாமான் தட்டுமுட்டுகள் வெளியே. சமையல் அடுப்பும் வெளியே. எல்லாம் சூரிய பகவானின் - அவர்கள் கிறிஸ்தவர்கள் - நேர் கிருபையிலேயே இருக்கும்.

ஆண்கள், ஏகதேசமாக எல்லாரும், பட்லர்கள் அல்லது 'பாய்கள்'. பெண்கள் சுருட்டுக் கிடங்கிலோ அல்லது பக்கத்திலிருக்கும் பஞ்சாலைகளிலோ தொழிலாளிகள். அங்கு அவர்கள் தொழிலைப் பற்றிக் கவனிக்க நமக்கு நேரமில்லை.

காளியக்காவும் இசக்கியம்மாளும் அங்கு குடியிருக்கவில்லை. செபஸ்தியம்மாளும் மேரியம்மாளும்தான் குடியிருந்தார்கள். உண்மையில் காளியக்காள்கள் புதிய பெயர்களில் இருந்தார்களே ஒழிய வேறில்லை. மாதா கோவிலுக்குப் போகும் அன்றுதான் ஆரோக்கியமாதாவின் கடாக்ஷம் இருப்பதாகக் காணலாம். பரிசுத்த ஆவி அவர்களுடைய ஆத்மாவைத் திருத்தியிருக்கலாம்; அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஆத்மா சில வருஷங்கள் தங்கி இருப்பிடத்தைச் சுத்தப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆரோக்கிய மாதா தெருவில் ஒரு முனையில் அவற்றைச் சேராது தனித்து ஒரு பங்களா - அந்தத் தெருக்காரர்கள் அப்படித்தான்

160

கொடுக்காப்புளி மரம்