பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லுவார்கள் - இருக்கிறது. அது பென்ஷன் பெற்ற ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் அவர்கள் வீடு. அவர் ஒரு புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். பெரிய பணக்காரர். "ஒட்டகங்கள் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழைந்து விடலாம். ஆனால் செல்வந்தர்கள் மோட்ச சாம்ராஜ்யத்தின் வாசலைக் கடக்க முடியாது" என்றார் கிறிஸ்து பகவான். சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்றோ என்னவோ, கர்த்தரின் திருப்பணியைத் தனது வாழ்க்கையின் ஜீவனாம்சமாகக் கொண்டார். உலகத்தின் சம்பிரதாயப்படி அவர் பக்திமான்தான். எத்தனையோ அஞ்ஞானிகளைக் குணப்படுத்தும்படியும், என்றும் அவியாத கந்தகக் குழியிலிருந்து தப்ப வைத்தும், மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழி தேடிக் கொடுத்திருக்கிறார். நல்லவர்; தர்மவான்; ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார். புதிய ஏற்பாட்டில் மனுஷ குமாரனின் திருவாக்குகள் எல்லாம் மனப்பாடம்.

அவர் பங்களா முன்வாசலில் ஒரு கொடுக்காப்புளி மரம் பங்களா எல்லைக்குட்பட்டது. ஆனால் வெளியே அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கும்.

வெறுங் கொடுக்காப்புளி மரமானாலும் அதன் உபயோகம் அதிகம் உண்டு. கொடுக்காப்புளிப் பழம் ஒரு கூறுக்கு ஒரு பைசா வீதம் விலையாகும்பொழுது அதை யாராவது விட்டு வைப்பார்களா? பள்ளிக்கூட வாசலிலும், மில் ஆலைப் பக்கங்களிலும் சவரியாயி காலையில் ஒரு கூடை எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு மணி நேரத்தில் கூடை காலி.

எவ்வளவு வருமானமிருந்தாலும் இந்தக் கொடுக்காப்புளி வியாபாரத்தில் சுவாமிதாஸ் ஐயரவர்களுக்கு ஒரு பிரேமை. 'ஆண்டவன் மனித வர்க்கத்திற்காகவே சகல ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் சிருஷ்டித்தார்.' அதைப் புறக்கணிப்பது மனித தர்மமல்ல. மேலும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இதை மலிவாகக் கிடைக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்கு வழி என்பது அவர் நியாயம். அவர்கள் தான் மோஷ சாம்ராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் இதற்காகத் திருட ஆரம்பித்துப் பாப மூட்டையைக் கட்டிக் கொள்ளாதபடி இவர் இந்தக் கைங்கர்யம் செய்து வருகிறார்.

கொடுக்காப்புளியில் உதிர்ந்து விழும் பழங்கள் சவரியாயிக்குக் குத்தகை. நாளைக்குக் கால் ரூபாய். காலையிலும் மாலையிலும் வந்து எடுத்துக்கொண்டு போக வேண்டியது. பணம் அன்றன்று கொடுத்து விட வேண்டியது. இதுதான் ஒப்பந்தம்.

இதனால் ஒரு ஏழை விதவைக்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கவில்லையா? சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதைவிடத் தனது தர்ம சிந்தனையைக் காட்ட வேறு என்ன செய்ய முடியும்?

திங்கட்கிழமை காலை.

புதுமைப்பித்தன் கதைகள்

161