பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பிக்கை


னக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை வாயில் அடைத்தால் தாகம் எடுக்காமல் என்ன செய்யும்? கண்ட இடத்தில், அசந்தர்ப்பமான இடத்தில் எல்லாம் இந்தத் தொந்தரவுதான். காப்பி, கலர் குடித்தால் தாகம் தீரக்கூடிய நாஸுக் பேர்வழியில்லை நான்.

அன்று நானும் என் நண்பரும் தெருவில் சுற்றிக்கொண்டு இருந்தோம். அவர் வெற்றிலை போடுங்களேன் என்றார். இதற்கு உபகாரம் வேறு வேண்டியிருக்கிறது. போட்டாய் விட்டது. அதன் உத்ஸாகத்தில் கொஞ்ச நேரம் நடுத்தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் திரும்பிப் பார்க்கும்படியான சல்லாபம். பிறகு... கேட்பானேன். தெரிந்ததுதான். அந்த வெற்றிலைக் கடைக்காரனுக்கு என்னைப் போன்ற பழைய ஏட்டுப் பிரதிகள் வருமென்று தெரியுமா? நண்பர் எனக்கு ஜலவசதிக்காக அவருக்குத் தெரிந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஏன் என்றால் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் நடக்க வேண்டுமென்ற சுத்த ஹம்பக் பேர்வழி நான்.

அந்த ஜோரில் தண்ணீர் பிரச்சினை ஒருவாறு முடிந்தது.

எனது நண்பர் ஒரு அபூர்வப் பேர்வழி; அவர் மேல் எப்பொழுதும் பொறாமை அதிகம். சமூகத்தின் எந்தப் படிக்கட்டிலிருப்பவனும் அவரிடம் வெகு லேசாகத் தனது உள்ளத்தைத் திறந்துவிடுவான். அது மட்டுமன்று. இந்தக் குழந்தைகள்தான், அவரிடம் என்ன வசீகர சக்தியோ?

அந்த ஹோட்டலில் ஒரு குழந்தை. அந்த ஹோட்டல் சொந்தக்காரனுடையது. பார்த்தால் அதை முத்தமிட வேண்டுமென்று தோன்றாதவன் மரக்கட்டை. குழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அவ்வளவுதான் ஏக ரகளை.

"ஓடி வா! ஓடி வா! ஒன்னு ரெண்டு... மூணு!"

குழந்தை... ஒரே பாய்ச்சலில் அவர் ஏந்திய கையில் விழுந்து, ஒவ்வொரு படியிலும் உருண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்று

164

நம்பிக்கை