அந்தச் சோர்வும் சோகமும் நிலவிய கண்களிலிருந்து துயரம் தேங்கிய அதரங்களிலிருந்து, மேகத்தின் பின் ஒளிந்து சந்திரன் வெளிவந்த மாதிரி...
ஒரு புன்சிரிப்பு.
அவள் கரங்கள் அவளையறியாமலே பால் சுவைத்துக் கொண்டிருக்கும் குழந்தையை அணைத்துக் கொள்கின்றன.
ஒரு நிமிஷந்தான்.
மறுபடியும் அவள் முகத்தில் வாழ்க்கையின் மேகம் கவிந்தது.
அந்தக் கனவானை நோக்கி ஏதோ கூறினாள்.
அவரோ?
அவரும் அந்தக் குழந்தையின் விளையாட்டில் கண்களைத் திறந்தபடி ஈடுபட்டிருக்கிறார்.
பை மாத்திரம் கைக்குள் பலமாக இறுகப் பிடிபட்டிருக்கிறது.
அந்தத் தாயும் குழந்தையும்... அவள் நீட்டிய கை... அதற்குத் தான் என்ன நம்பிக்கை. அந்தக் கண்கள் ஒளி இழந்துதான் இருக்கின்றன. அதில் என்ன நம்பிக்கை! சோர்வினாலா?... வேறு கதியில்லாமலா... இருந்தாலும் நம்பிக்கைதானே. அந்தப் பிரமையாவது இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன விருக்கிறது?
"ஓடி வா! ஓடிவா! ஒன்று ரெண்டு... மூணு..." குழந்தையின் களங்கமற்ற வெள்ளிக் கிண்ணத் தொனி போன்ற சிரிப்பு... ஒரே பாய்ச்சல், அவர் மீது என்ன நம்பிக்கை!
மணிக்கொடி, 15.9.1934
166
நம்பிக்கை