பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எந்த வரையறைக்கும் கட்டுப்படாமலும் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. செம்மையான பதிப்புப் பார்வையும் அக்கறையும் செலுத்தப்படாததால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலக்கியத் திருட்டு என்ற பழி அவர்மீது வீசப்படுவதற்கு வசதி செய்யும் வகையில் பதிப்பகத்தாரின் வெளியீட்டு முறைகள் அமைந்துவிட்டன. எந்த இதழில், எந்தப் புனை பெயரில் கதைகள் வெளிவந்தன, எப்போது அவை நூலாக்கம் பெற்றன என்பன போன்ற தகவல்கள் நூற்பதிப்பில் இல்லாத நிலையே இங்குச் சுட்டப்படுகின்றது. புதிய விமரிசனப் பார்வைகளின் வெளிச்சத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடை காணும் முறையிலும் பாடங்கள் அமையவில்லை. பல இடங்களில் அவற்றின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாக இருந்தது. புதுமைப்பித்தனின் (சாதிய) பாத்திரச் சித்தரிப்பு, மொழி முதலானவை பற்றிய விவாதம், படைப்புகளின் ஏற்றுக்கொள்ளத்தக்க பாடம் பற்றிய கேள்விகளை எழுப்பியது. புதுமைப்பித்தன் காலத்திலேயே அவருடைய எழுத்தாக்கங்கள் பல் வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. எந்தவோர் எழுத்தாளருக்கும் இவை நேருமென்றாலும், அவருக்குள்ள பண்பாட்டு முக்கியத்துவத்தைப் பொறுத்தே இவை முக்கியத்துவம் பெறும். இந்தப் பின்னணியில், காலம், இதழ், தலைப்பு, புனைபெயர் போன்ற வெளியீட்டு விவரங்களும் இன்றியமையாதன என்பது புரிந்தது. கதைகளின் முதல் வெளியீடு பற்றிய இந்த விவரங்கள் மட்டுமல்லாமல், அவை நூலாக்கம் பெற்ற காலம் முதலான செய்திகளும் முக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டது. புதுமைப்பித்தனின் கடைசிக் கால வாழ்க்கைச் சோதனைகளும், அகால மரணமும், இவற்றின் விளைவாக அவர் நூல்கள் பதிப்பகத்தாரிடம் பட்ட பாடும் பதிப்புச் சிக்கல்களைப் பன்மடங்காக்கிவிட்டன. 1987இல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தொகுதிகள் புதுமைப்பித்தன் படைப்புகளை ஒரு சேரப் படிக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தந்தன.

இந்தப் பின்னணியில், மேற்கண்ட கேள்விகள் பற்றிய ஓர்மையோடு அமைந்த செம்பதிப்பு வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒரு தேர்ந்த வாசகருக்கும்கூடத் தேவையே என்று தோன்றியது. புதுமைப் பித்தனின் வாசகர்கள் அவருடைய கதைகளைத் திருத்தமான / நம்பகமான பாடங்களோடு, நேர்த்தியான அச்சமைப்பில் படிக்க வாய்ப்பில்லாமலிருப்பது நியாயமில்லை.

புதுமைப்பித்தன் மறைந்த இந்த ஐம்பதாண்டுகளில் அவரைப் பற்றிய கவனமும் அக்கறையும் மிகுந்துள்ள சூழ்நிலையிலும், மேலே எழுப்பிய கேள்விகளின் பின்னணியிலும், 'அன்னை இட்ட தீ ' நூற்பதிப்புத் தொடர்பான பல்லாண்டுப் பட்டறிவின் விளைவாகவும் இந்தப் பதிப்பு உருவாகியுள்ளது. இதில் 97 கதைகளும், ஒரு குறுநாவலும், முற்றுப்பெறாத நாவல் ஒன்றும் இடம்பெறுகின்றன.

கதைகளும் இதழ்களும்

புதுமைப்பித்தனின் முதல் படைப்புகள் மூன்றும் கட்டுரைகள். இவை டி. எஸ். சொக்கலிங்கத்தின் 'காந்தி'யில் அக்டோபர் முதல் டிசம்பர் 1933 வரை வெளியாகியுள்ளன. அவருடைய முதல் கதையான

16