பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'ஆற்றங்கரைப் பிள்ளையார்' 'மணிக்கொடி'யில் இரண்டு பகுதிகளாக (22/29.4.1934) வெளிவந்தது. (இப்பதிப்பு முன்னுரையில் குறிப்பிடப்படும் புதுமைப்பித்தன் கதைகள் பற்றிய - தலைப்பு, புனைபெயர், காலம், இதழ், நூலாக்கம் - விவரங்களுக்கு ஆதாரமாகப் பின்னிணைப்பு 3 அமைந்துள்ளது.) அவர் எழுதிய கதைகளில் ஏறத்தாழ நாற்பத்தைந்து "புதிய பரிசீலனைகளுக்கு இடங்கொடுக்கும். உற்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிகை" என்று புதுமைப்பித்தனால் பின்னாளில் அடையாளம் காட்டப்பட்ட 'மணிக்கொடி'யில்தான் வெளிவந்துள்ளன. வ. ரா. பொறுப்பில் வெளியான பெரிய அளவு 'மணிக்கொடி'யில் ஏறத்தாழ முப்பது கதைகளும், பி. எஸ். ராமையாவின் பொறுப்பில் வெளிவந்த (சிறுகதை) 'மணிக்கொடி'யில் 'துன்பக்கேணி' முதலான, பிற கதைகளும் வெளியாகியுள்ளன.

வ. ரா. 'மணிக்கொடி' காலத்தில் 'காந்தி'யில் நான்கு, கதைகளையும், 'சுதந்திரச் சங்'கின் அடுத்தடுத்த இதழ்களில் இரண்டு கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

1933ஆம் ஆண்டின் இடையில், பொருள் முட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டிருந்த ராய. சொக்கலிங்கத்தின் 'ஊழியன்' வார இதழ், 6 ஜூலை 1934இலிருந்து (தொகுதி 14, இதழ் 1) மீண்டும் வெளிவரத் தொடங்கியது. ராய. சொ. தொடர்ந்து ஆசிரியப் பதவியை வகித்து வந்தாலும், 'இந்தியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்' என்ற கம்பெனிக்கு 'ஊழியன்' கைமாறியிருந்தது. அதற்கு முன்புவரை, காரைக்குடியிலிருந்து வெளியான 'ஊழியன்' சென்னைக்கு இடம் மாறியது. இந்தச் சமயத்தில்தான் புதுமைப்பித்தன் அதில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 24.8.1934 இலிருந்து 22.2.1935வரை வெளியான அதன் இதழ்களில் பதிமூன்று கதைகளும், ஆறு தழுவல் கதைகளும், நான்கு கட்டுரைகளும் அவர் எழுதியிருப்பதை அடையாளம் காணமுடிகின்றது.

இவை தவிர, அவர் உதவியாசிரியராகப் பணியாற்றிய 'தினமணி'யின் மலர்களில் (1935, 1937,1938) மூன்று கதைகளை எழுதியிருக்கிறார்.

இதற்கடுத்த கட்டத்தில், இரங்கூனிலிருந்து வெளியான வெ. சாமிநாத சர்மாவின் 'ஜோதி'யில் (1938-39) ஐந்து கதைகளும், க. நா. சுப்ரமண்யத்தின் 'சூறாவளி'யில் (1939) இரண்டு கதைகளும் வெளிவந்தன. "மனப்போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் நெடுங்காலம் ஒதுங்க முயன்ற 'கலைமகள்' பத்திரிகை" புதுமைப்பித்தனின் "போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து" பதினொரு கதைகளை வெளியிட்டது. 1938 மே இதழில் 'மனக்குகை ஓவியங்கள்' வெளிவந்த இரண்டரையாண்டு இடை வெளிக்குப் பிறகு, டிசம்பர் 1941இலிருந்து பிப்ரவரி 1946 வரை பிற கதைகளைக் 'கலைமகள்' வெளியிட்டது.

1940களின் இடையில், 'கலைமகளைத் தவிர, 'தமிழ்மணி' (1944) ஒரு கதையையும், க. நா. சு.வின் 'சந்திரோதயம் (1945) ஒரு கதையையும், திரு. வி. க.விடமிருந்து பெற்று, சக்திதாசன் சுப்பிரமணியன் நடத்திய 'நவசக்தி' (1944-45) ஒரு கதையையும், திருவனந்தபுரம்

17