பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். சிதம்பரத்தின் 'கவிக்குயில்' மலர் (1946) ஒரு கதையையும் வெளியிட்டன.

புதுமைப்பித்தனின் இறுதி ஆண்டுகளில், பி.எல். முத்தையாவை வெளியீட்டாளராகவும், ரகுநாதனை ஆசிரியராகவும் கொண்டு வெளியான 'முல்லை' (1946-47) மாத இதழ் 'ஜோதி'யில் முதலில் வெளியான 'புரட்சி மனப்பான்மை', 'விபரீத ஆசை' ஆகியவற்றை மறுவெளியீடு செய்ததோடு, 'அவதாரம்' கதையினையும் புதிதாக வெளியிட்டது.

புதுமைப்பித்தனின் இறுதிக் கதை என்று கருதுவதற்கு உருவகத் தன்மையோடு பொருந்திவரும் 'கயிற்றரவு' அ. கி. கோபாலனின் 'காதம்பரி'யில் (1948) வெளிவந்தது.

இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 97 கதைகளில் ஏழு கதைகளின் முதல் வெளியீட்டு விவரம் முற்றும் அறியாத நிலையில், புதுமைப்பித்தன் எழுதிய இதழ்கள் பற்றிய செய்திகள் இவை.

கதைகளும் நூலாக்கமும்

புதுமைப்பித்தனின் முதல் கதைத் தொகுப்பு அவர் பெயரைத் தலைப்பிலேயே தாங்கி, 'புதுமைப்பித்தன் கதைகள்' என நவயுகப் பிரசுராலய வெளியீடாக 1940இல் வெளிவந்தது. நூலுக்கு அணிந்துரை வழங்கிய ரா. ஸ்ரீ. தேசிகன் 2.2. 1940 என்று அதற்கு நாளிட்டிருப்பதால், 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நூல் வெளிவந்ததாகக் கொள்ளலாம். அந்நூல் சென்னை மவுண்ட் ரோடு பி. என். பிரசில் நேர்த்தியாக, படங்களுடன் (அவற்றுள் ஒன்று ஆர்யா வரைந்தது) அச்சிடப்பட்டிருந்தது. நூல் விலை 2 ரூபாய். (புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான அவர் கதைத் தொகுப்புகள் பற்றிய நூல் விவரங்களைப் பின்னிணைப்பு 2இல் காண்க.)

இதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின், அதே நவயுகப் பிரசுராலய வெளியீடாக 'ஆறு கதைகள்', 'நாசகாரக் கும்பல்' (மற்றும் 'பக்த குசேலா') ஆகியவை வெளிவந்தன. வெளியான காலம் பற்றிய பதிவு நூலுக்குள் இல்லையாயினும், அகச்சான்றுகளிலிருந்து இவை ஏறத்தாழப் 'புதுமைப்பித்தன் கதைகள்' வெளியான சில காலத்திற்குள் (1940-41) வெளியிடப்பட்டன என்று அறிய முடிகின்றது. இந்த நூல்களும் 'புதுமைப்பித்தன் கதைகள்' அச்சிடப்பட்ட அதே பி. என். பிரசில் அச்சாகியுள்ளன. நூலின் விலை நான்கணாவாகவும் (ஆறு கதைகள்), மூன்றணாவாகவும் ('நாசகாரக் கும்பல்') குறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நூல்களின் பின்பக்கங்களில் 'புதுமைப்பித்தன் கதைகள்' அதே இரண்டு ரூபாய்க்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது; 1939இல் வெளியான புதுமைப்பித்தனின் 'உலகத்துச் சிறுகதைகள்', 'கப்சிப் தர்பார்', 'பாஸிஸ்ட் ஜடாமுனி' ஆகியனவும், இதே காலத்தில் வெளியான பிற நூல்களும் ('திரிபுரி காங்கிரஸ்', தி. நா. சுப்பிரமணியனின் 'கட்டபொம்மு' முதலானவை) விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 'ஆறு கதைகள்' நூலில் வெளியான எந்தக் கதையும் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பில் இடம் பெறவில்லை. புதுமைப்பித்தனின் 'கபாடபுரம்' கதையின் முதல் பகுதியும், 'அடுத்த யுத்தத்தின் தர்மகர்த்தர்கள்'

18