பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுமோ என்று பயந்து முனிசிபல் உபநதிகள் பல அதில் வந்து சேருகின்றன.

நகரப் படலம்

இந்தப் புனிதமான நதி தீரத்திலே, வண்ணாரப்பேட்டை என்ற திவ்யப் பிரதேசம் ஒன்று உண்டு. சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல் பட்டணத்தின் தொந்திரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது. அதாவது தமிழர்களில் நாகரிக வைதீகர்கள் மாதிரி குடுமியும், விபூதியும் ருத்திராட்சமும், ஸெர்ஜ் ஸுட்டும் ஐக்கியப்பட்டுப் பரிணமிக்கும் தமிழ்நாட்டு வைதீகர்கள் மாதிரி இரண்டையும் பெற்ற ஓர் ஸ்தலமாக இருந்தது.

இதன் ஸ்தல புராணம், கபாடபுரம் கடலுடன் ஐக்கியப்படும் பொழுது மறையாவிட்டாலும் சமீபத்தில் வந்த தாமிரவருணியின் வெள்ளத்தினால் ஆற்றில் நித்திய மோன சமாதியடைந்தது என்பது வண்ணாரப்பேட்டை முதியோர்களின் வாக்கு. இந்தக் கிராம நகரில் கூட கோபுரங்களும் மாட மாளிகைகளும் இல்லாவிடினும் கூரை வீடுகளுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் காரை வீடுகளும் உண்டு. இவையெல்லாம் அவ்வூர் பெரியார்களின் வாசஸ்தலம் என்பது உண்மையிலும் உண்மை.

இவ்வூரில் கோவில்களும் உண்டு. அதாவது பட்சபாதமில்லாமல், சிவபிரான் விஷ்ணுவாக முயன்ற (அது ஊர்க்காரர்களின் முயற்சி; இந்த உரிமை சிதம்பரத் தலத்தில் மட்டுமில்லை) ஒரு கோவில். "கூறு சங்கு தோல் முரசு கொட்டோ சை"யல்லாமல் மற்றொன்றும் அறியாத வேறொரு சிவபிரான். அப்புறம் ஒரு பேராச்சி - எங்கள் ஸ்தலத்திலிருக்கும் மக்களின் ரத்த வெறியையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் பேராச்சி. இன்னும் ஒன்றிரண்டு குட்டிச் சுடலைமாடன்கள். இவைதான் அத்தலத்தின் தெய்வங்கள்; காவல் தெய்வங்கள்.

திருஅவதாரப் படலம்

திருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1916ம் வருடம் ஒரு இரவில், திரு.அம்மையப்ப பிள்ளைக்கும் சிவகாமி அம்மாளுக்குமாக - அந்த இரவில் முக்கியமாக அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள் - திரு. கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.

பிறக்கும் பொழுது உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலேயே எடுத்துக் காண்பித்துவிட்டார். இவருடைய தாயார் இவர் வரும்வரை பிலாக்கணத்தையும் முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும் வேர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள் அப்படி நினைக்கவில்லை. அவரைத்

198

புதிய கந்த புராணம்