பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ற கட்டுரையும் வெளிவந்த 'சந்திரோதயம்' (30.6.1945) இதழில், 'இந்த இதழில் எழுதியுள்ளவர்கள்' என்ற பகுதியில், புதுமைப்பித்தன் பற்றிய குறிப்பு, "புதுமைப்பித்தன் கதைகள், ஆறு கதைகள், காஞ்சனை முதலிய கதைத் தொகுதிகள் இவர் எழுதியவை வெளிவந்திருக்கின்றன" என்று கூறுகிறது. மேலும், 'ஆறு கதைகள்', 'நாசகாரக் கும்பல்', 'பக்த குசேலா' ஆகிய மூன்று நூல்களும், பக்கத்துக்குப் பக்கம் வெள்ளைத் தாள் வைத்துக் (inter-leaf) கட்டடம் செய்யப்பட்ட ஒரு தொகுப்பில், புதுமைப்பித்தன் தம் கைப்படத் திருத்தங்கள் செய்திருக்கிறார். (அடுத்த பதிப்பிற்கென நூலாசிரியர் திருத்தங்கள் செய்வதற்காக இவ்வாறு ஓரிரு பிரதிகள் தயாரிப்பது அந்நாளைய வழக்கம்.) இந்தத் தொகுப்பை வைத்திருக்கும் ரகுநாதன், புதுமைப்பித்தன் வீட்டிலிருந்து இது பெறப்பட்டது என்று எனக்குத் தெரிவித்ததோடு, அதனை ஒளிநகல் செய்துகொள்ளவும் அனுமதித்தார் (காண்க: பின்னிணைப்பு 4). 1951இன் இறுதியில் தமிழ்ச் சுடர் நிலையம் வெளியிட்ட 'கபாடபுரம்' தொகுப்பின் கட்டங்கட்டிய பதிப்புக் குறிப்பு, 'நாசகாரக் கும்பல்' மற்றும் 'ஆறு கதைக'ளில் வந்தவற்றை "நவயுகப் பிரசுரமாக பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு வெளிவந்தவையாகும்" என்று கூறுகின்றது. மேலும், புதுமைப்பித்தனின் நண்பர் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் 'ஆறு கதைகள்', 'பக்த குசேலா' ஆகிய நூல்களின் தமது படிகளின் முதல் பக்கத்தில் Chidambaram. S., 10.10.41 என ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளார். எனவே, இவை 1941 அக்டோபருக்கு முன்பு வெளியாகிவிட்டன என்பது உறுதி.

இதன் பிறகு 1943 டிசம்பரில் 'கலைமகள் காரியாலய' வெளியீடாகக் 'காஞ்சனை' வெளிவந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த சூழ்நிலையில், தரங்குறைந்த தாளில், சென்னைக்கு வெளியே திருபுவனத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் 14 கதைகளைக் கொண்டிருந்தது. இவை யாவும் முதன்முறையாக நூலாக்கம் பெற்றவை. புதுமைப்பித்தனே 23-12-1943 என நாளிட்டு, 'எச்சரிக்கை!' என்று ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறார். இந்நூல் கவனமாக மெய்ப்புப் பார்க்கப்பட்டது கண்கூடு. 'கலைமகள் காரியாலய'த்தின் பிற வெளியீடுகளைப் போலவே இதற்கும் கா. ஸ்ரீ.ஸ்ரீ.யே மெய்ப்புப் பார்த்திருக்கிறார். ரகுநாதன் நேர்ப்பேச்சில் கூறிய இத்தகவலைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ. எனக்கு எழுதிய கடிதத்திலும் உறுதிப்படுத்தினார்.

1947 செப்டம்பரில், சென்னை மயிலாப்பூர் தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக 'ஆண்மை' வெளிவந்தது. இதில் எட்டுக் கதைகள் அடக்கம். 'புதுமைப்பித்தன் கதைக'ளில் வெளியான 'ஆண் சிங்கம்' 'ஆண்மை' எனப் பெயரிடப்பட்டு, நூல் தலைப்பாகவும் அமைந்தது. இது தவிர, 'ஆறு கதைகள்' நூலில் இடம்பெற்ற 'வழி' மீண்டும் இதில் இடம்பெற்றது. 29.8.1947 என்று நாளிட்டுப் புதுமைப்பித்தன் ஒரு முன்னுரையினையும் எழுதியிருக்கிறார்.

1947இல், நவயுகப் பிரசுராலயம் 'புதுமைப்பித்தன் கதைகள்' நூலை மறு வெளியீடு செய்தது. இது தவிர, முதல் மூன்று கதைகளை மட்டும் அப்படியே, அதே அச்சுக் கோப்பில், மிகைப் படிகளை அச்சிட்டு,

19