பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்மை

ஶ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால், அது ‘பெப்பர்மின்ட்’ கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காத்தால், பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு மேல் என்று பட்டது. பிறகு என்ன? பெண் கிடைக்காமலா போய் விடும்? ஆத்தூர்ப் பண்ணை ஐயர் மகள் ருக்மிணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக தடபுடல். பெற்றோர் மடியிலிருந்தபடியே ஸ்ரீமான் ஸ்ரீனிவாசனுக்கும், ருக்மிணி அம்மாளுக்கும் திருமணம் நடந்தது. அந்தச் சாக்கினால் சஷ்டியப்த பூர்த்திக்கு முன்பே, திருமண மேடையில் உட்காரும் பாக்கியம் இரு சம்பந்திகளுக்கு கிடைத்ததுதான் மிச்சம்.

கலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம் இருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம். சட்டம், சாஸ்திரம் இவற்றில் வேறு இருக்கலாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியுகதத்திலே, திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்பது எனக்குத் தெரியும்.

ஸ்ரீனிவாசன் தகப்பனாரும் தம் சம்பத்தியான ஆத்தூர்ப் பண்ணையாருக்கு இளைத்தவரல்லர். ஆத்தூர்ப் பண்ணையாரும் ஸ்ரீனிவாசன் தகப்பனாருக்கு மசியக் கூடியவரல்லர். இப்படி இருவருக்கும் ஆரம்பித்த மௌனமான துவந்த யுத்தம், நாளுக்கு நாள் வளர்ந்தது. சீர்வரிசை, மரியாதை, இத்யாதி… இத்யாதி காரணம், பரமேச்வர ஐயர் ஸ்ரீனிவாசன் தகப்பனார் - தமது பெருமைக்கேற்றபடி, ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நடந்து கொள்ளவில்லை என்று குறைப்பட்டு கொண்டார். அதற்கு ஆதாரமாக, “மாப்பிள்ளையென்று துரும்பைக் கிள்ளிப் போட்டாலும், விறைத்துக் கொண்டுதான் நிற்கும்; பண்ணைப் பெருமையின் ஜம்பம் கூட அதன்முன் சாயாது” என்பார்.

புதுமைப்பித்தன் கதைகள்

207