பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீனிவாஸனும் ருக்மிணியும் துவந்த யுத்தத்தில் கலந்துகொள்ள வில்லை. அதைப் பற்றி இருவருக்கும் தெரியாது. ஒவ்வொரு வருஷமும் பரமேச்வர ஐயர் தம் புத்திரனைச் சம்பந்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார். பிறகு இல்லாத நோணாவட்டம் எல்லாம் சொல்லிக் கொண்டு வருஷம் பூராவும் பேச அது ஓர் ஐட்டம் நியூஸ்'. ஸ்ரீனிவாஸனுக்கு மாமனார் வீட்டிற்குப் போவதென்றால் ரொம்பக் குஷி. ருக்மிணி இருக்கிறாள் என்ற நினைப்பினால் அன்று பக்ஷணம், நாலைந்து நாள் 'மாப்பிள்ளை' 'மாப்பிள்ளை' என்ற உபசாரம். விளையாட்டு முதலியவை கிடைக்கும் இடமாயும், அப்பாவின் கோபமும் அடியும் எட்டாத இடமாயும் இருந்ததே காரணம். மேலும், விளையாடுவதற்கு நிரம்பப் பயல்கள் இருந்தனர். இதனால்தான் மாமா வீடு என்றால் அவனுக்கு வெகு குஷி.

இப்படிப் பத்து வருஷங்கள் கழிந்தன.

சம்பந்திச் சண்டை ஓயவில்லை.

சீமாவும் சின்னப் பையனாக இருந்து மெதுவாகப் பெரிய மனிதனாகிவிட்டான். பரமேச்வர ஐயருக்குப் பையன் வளர வளரக் குதூகலம். ஆத்தூர் பண்ணைக்குப் புத்தி கற்பிக்கச் சாந்தி முகூர்த்தம் என்ற கடைசித் துருப்பை உபயோகிக்க வேண்டிய காலம் நெருங்கு வதில் மிகுந்த சந்தோஷம். 'ஆத்தூர்ப் பயலை என்ன செய்கிறேன் பார்!' என்று தம் மனைவியிடம் வீரம் பேசினார். அவருடைய சகதர்மிணியும் தனது கணவன் வீர புருஷன் என்பதில் மிகுதியும் களித்தாள்.

சீமாவும் மாமனார் வீட்டுக்குச் செல்வது படிப்படியாகத் தடைப் பட்டுப் போயிற்று. முதலில் கொஞ்சம் வருத்தந்தான். ஆனால் சீமா புஸ்தகம் படித்தவன் அல்லவா? அதில் 'தந்தை சொல்மிக்க மந்திர மில்லை' என்று படித்திருக்கிறான். தந்தையின் சொல்-மந்திரத்தைவிட, கை - மந்திரத்தில் அவனுக்கு அதிக அனுபவம் உண்டு. சீமாவும் மாமனாரை வெறுக்க ஆரம்பித்தான். காரணமும் கொஞ்சம் உண்டு. ருக்மிணி முன்போல் அவனுடன் விளையாடுவதில்லை. ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டாள். ருக்மிணியின் தகப்பனாரும், அவன் அங்கு ஒரு தடவை சென்றிருந்தபொழுது அவன் தகப்பனாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம், ருக்மிணி வந்து அவனிடம் சொல்லியழுதாள்.

அவளுக்குச் சீமாவின் தகப்பனாரை எப்படிப் பேசலாம் என்ற வருத்தம். குழந்தையுள்ளத்தில் தன் இரகசியத்தைச் சீமாவிடம், அவன் அங்கு சென்றிருக்கும்பொழுது சொல்லிவிட்டாள். அதிலிருந்து ருக்மிணி என்றால் சீமாவுக்குத் தனது உள்ளம் என்ற ஒரு பற்றுதல். ஆனால் மாமாவின்மீதும் அத்தையின்மீதும் அடங்காத கோபம். அந்தக் கோபத்தில் ஏற்பட்ட வெறுப்பின் சாயை சீமாவின் மனவுலகத்தில் ருக்மிணியைத் தீண்டியதும் உண்டு.

ருக்மிணி புஷ்பவதியானாள்.