பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடங்குகளும் ஏகத் தடபுடலாக நடந்தன. ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நேரில் வந்து அழைத்தும் இங்கிருந்து ஒருவரும் போகவில்லை.

ருக்மிணிக்கு மிகுந்த வருத்தம். தன் சீமா வராமலிருப்பானா என்று ஏங்கினாள். ஆத்தூர் ஐயரும் குழந்தை ருக்மிணிக்குச் சாந்தி முகூர்த் தம் செய்விக்க ஒரு நல்ல தினத்தைப் பார்த்துப் பரமேச்வர ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

பரமேச்வர ஐயருக்கு இந்தக் கடிதத்தைக் கண்டதும் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. தாம் நெடுநாள் எதிர்பார்த்திருந்த தினம் வந்த உற்சாகத்தில் அன்று விருந்து நடத்தினார். பிறகு சம்பந்திக்கு நீண்ட கடிதம் ஏறக்குறையக் குற்றப் பத்திரிகை ஒன்று எழுதி, அதில் 5000 ரூ. கையில் வந்தால்தான் தன் மகன் சாந்தி முகூர்த்தம் செய்வான் என்றும், மேலும் சம்பந்தி ஐயரவர்களின் சீர்வரிசைக் குறைவுகளையெல்லாம் இப்பொழுது சரிக்கட்டி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

இந்த விஷயத்தில் சீமாவுக்கு ஒரு சிறிது மனத்தாங்கல்தான். இவ்வளவுக்கும் ருக்மிணி,பாவம், என்ன செய்வாள் என்று நினைத் தான். ஆனால் தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை; சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.

இந்த விஷயத்தைப் பற்றி ருக்மிணி தனக்குக் கடிதம் எழுதுவாள் என்று எதிர்பார்த்தான். அவள் எழுதினால் அவன் நாவல்களில் படித்த கதாநாயகி போல் ருக்மிணியும் தன்னைக் காதலிக்கிறாள் என்று அப்பாவின் கோபத்தையும் எதிர்ப்பதற்குத் தயாராகியிருந்தான்.

ஆனால் கடிதம் வரவில்லை.

சீமாவுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒரு வேளை, நாவல் களில் படித்த மாதிரி வேறொருவனைக் காதலிக்கிறாளோ என் னவோ? பொம்மைக் கலியாணம் செய்யப்பட்ட பெண், நாவல் சம்பிரதாயப்படி வேறொருவனைக் காதலித்து.. கடைசியாகப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கலியாணம் செய்துகொள்ளுவதுதான் சுவாரஸ்யமான முடிவு. அந்தக் கட்டத்தில்தான் கதாசிரியனும், 'வாசகர்களே!' என்று ஆரம்பித்துக் குழந்தைக் கலியாணத்தின் கொடுமைகளைப் பற்றி வியாசம் எழுத முடியும். சீமாவின் உள்ளத்தில் என்னென்னவோ எண்ணங்களெல்லாம் குவிந்தன. ஆனால் ருக்மிணியின்மீது ஒரு பெரிய ஏமாற்றந்தான் மிச்சம். கடிதம் வரவில்லை. சீமாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. ருக்மிணியை இரகசிய மாகக் கவனித்தால், அல்லது அவளைச் சந்தித்தால், தன்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்று கண்டுபிடித்துவிடலாமே! அப்பாவுக்குத் தெரியாமல் அங்கே போக வேண்டும். சீமா இப்பொழுது சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்பாவுக்குத் தெரியாமல் போவது அவ்வளவு கஷ்டமில்லை.