பள்ளிக்கூட மாணவனுக்கா தகப்பனாரிடம் இருந்து பணம் தருவிக்க வழி தெரியாது?
2
ஆத்தூர் ஐயரவர்களுக்குப் பண்ணைத் திமிரும் சிறிது உண்டு. பரமேச்வரன் தன் வழிக்கு வராமல், எங்கு போய் விடுவான் என்று தைரியம். தன் சொல் சக்தியால், பரமேச்வர ஐயர், வேறு பெண் சீமாவிற்குப் பார்க்க எத்தனித்தால், தடுத்து விடலாம் என்ற தைரியம் இருந்தது.. பயல் சீமாவும், இப்படி இருப்பானா என்று கூடச் சில சமயம் பேசியதுண்டு. இதைக் கேட்ட சமயமெலாம், ருக்மிணிக்குக் கண்ணீர் வரும்.
“அவனை மறந்து விடு. கொட்டத்தை அடக்கி விடுகிறேன்” என்று ருக்மிணியிடம் சொல்லிய காலங்களும் உண்டு.
“போங்கள் அண்ணா” என்று கண்ணீர் விட்டு உபவாசம் இருப்பதே, ருக்மிணியின் வழக்கமாகி விடும் போல் இருந்தது. அவள் கணவன் என்ற வார்த்தையின் பூரண அர்த்தத்தையறிந்தவள் அல்ல. உள்ளத்திலே ஏதோ தன்னையறியாத பக்தி, பாசம் சீமாவின் மீது வளர்ந்து கொண்டே இருந்தது.
சிறு பருவத்தில், அவனுடன் விளையாடினதெல்லாம், ஒன்றிற்குப் பத்தாக உள்ளத்தில் விளையாட ஆரம்பித்தன. எத்தனையோ தடவை ‘அவருக்குக் கடுதாசு எழுத வேண்டும்’ என்று காகிதங்களை எடுத்து முன் வைத்த நேரங்கள் உண்டு. ஆனால், என்ன நினைத்துக் கொள்வாரோ, மாமாவிற்குத் தெரிந்தால் பெரிய அவமானம் என்ற பயம்.
ஊர் வாயை மூட முடியுமா? ருக்மிணி வாழாவெட்டியாகி விட்டாள் என்று ஊர்க் கிழங்களிடையே பேச்சு. ஊர்ச் சிறுமிகளுக்கும் ருக்மிணி என்றால், சிறிது இளக்காரம். இதனால், ருக்மிணிக்கு ஆறுதலாக ஒருவரும் இல்லை. அவள் தாயார் அவள் தகப்பனாரின் எதிரொலி.
புஷ்பங்களிலே பல வகையுண்டு. சிலவற்றைப் பார்த்ததும் குதூகலம், களிப்பு இவையெல்லாம் பிறக்கும். சில சாந்தியை அளிக்கும். சில உள்ளத்தில் காரணமற்ற துக்கத்தை, சோகத்தை எழுப்பும்.
ருக்மிணி இயற்கையிலேயே நல்ல அழகி. சிறு பிராயத்திலேயே, ஆளை விழுங்கும் விழிகள். அதுவும் இயற்கையின் பரிபூரண கிருபை இருக்கும் பொழுது! ஆனால், கூம்பிச் சாம்பிய உள்ளத்தின் உள்ளொளி, அவளது துயரம் தேங்கிய கண்களில் பிரதிபலிக்கும். அவளைப் பார்க்கும் பொழுது, நம்மையறியாத பெருமூச்சு வரும்.
ஊர்ப் பேச்சிற்கும், பொச்சரிப்பிற்கும் பயந்து, அதிகாலையிலேயே ஆற்றிற்குச் சென்று விட்டு வந்து விடுவது வழக்கம். ஆத்தூரில், ஊருக்குச் சற்றுக் கூப்பிடு தூரத்தில்தான் ஆறு. ருக்மிணி பயமற்றவள்.
210
ஆண்மை