பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தழுவு' என்ற விளக்கக் குறிப்புடன் வெளியிடப்பட்ட 'தமிழ் படித்த பெண்டாட்டி' என்ற ஒரு கதையைத் தவிர வேறு எந்தத் தழுவல் கதையையும் அவர் 'புதுமைப்பித்தன்' என்ற பெயரில் எழுதவில்லை என்பது போன்ற உண்மைகளை உறுதிப்படுத்த, புனைபெயர் பற்றிய தகவல் கவனத்திற்குரியதாகின்றது.

அவருடைய முதல் படைப்பான 'குலோப்ஜான் காத'லும், முதல் கதையான 'ஆற்றங்கரைப் பிள்ளையா'ரும் புதுமைப்பித்தன் என்ற பெயரிலேயே வெளிவந்துள்ளன. "என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும்" என்ற தன்னுணர்வு அவருக்கு இருந்திருக்கிறது. எழுதத் தொடங்கும்போதே சூட்டிக்கொண்ட புனைபெயராகும் இது. எம். வேதசகாயகுமார் கருதுவதுபோல் 'பித்தன்' என்ற பெயரில் எழுதத் தொடங்கிப் பின்பு முன்னொட்டு இணைத்துக்கொள்ளப்பட்டதன்று இது. பழமைக்கு எதிராகப் புதுமையின் மீது கொண்ட பித்தத்தைத் தமது உலகப் பார்வையாகப் பறைசாற்றும் புனைபெயர் இது.

இதைத் தவிர, தமது இயற்பெயரான 'சொ. விருத்தாசலம்' (சில சமயங்களில் பி.ஏ. என்ற பட்டத்தோடு) மற்றும் அதன் முதலெழுத்து களான 'சொ. வி.' என்ற பெயர்களில் புதுமைப்பித்தன் தம் கதைகளை எழுதியிருக்கிறார். 'கூத்தன்', 'நந்தன்' என்ற பெயர்களிலும் கதைகள் வெளியாகியிருக்கின்றன. ஒரே இதழில் - முக்கியமாக வ. ரா. காலத்து 'மணிக்கொடி' இதழ்களில் - ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை வெளியிடும்போது வேறுவேறு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

'கூத்தன்' என்ற பெயரில் எழுதிய ஒரு கதை ('கவந்தனும் காமனும்') அவர் வாழ்நாளிலேயே அவருடைய கதைத் தொகுப்பில் இடம் பெற்றுவிட்டது. 'கூத்தன்' என்ற பெயரில் எழுதிய ஒரு கதையைத் (நொண்டி) தழுவல் என ரகுநாதன் நிறுவியுள்ளார். 'நந்தன்' என்ற பெயரில் எழுதியவை எல்லாம் தழுவல்களே என்றும் அவர் துணிந்திருக்கிறார். 'குற்றவாளி யார்?', 'பூசனிக்காய் அம்பி' ஆகியவற்றைத் தழுவல் என அவர் நிறுவாவிட்டாலும், 'நந்தன்' என்ற பெயரில் எழுதிய எந்தப் படைப்பும் அவர் காலத்தில் நூலாக்கம் பெறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி.

'மணிக்கொடி' காலம் வரை தம் இயற்பெயரையும் கணிசமான அளவுக்கு அவர் பயன்படுத்தியிருக்கிறார். முக்கியமாகக் கட்டுரைகள் பெரும்பான்மையும் தம் இயற்பெயரிலேயே வெளியிட்டிருக்கிறார். ஊதியம் பெற்ற ஊழியராகப் பணியாற்றிய 'ஊழிய'னில் எந்தப் படைப்பையும் புதுமைப்பித்தன் என்ற பெயரில் அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

'புதுமைப்பித்தன்' என்பதே அவர் பெரிதும் விரும்பிய பெயர் என்பது அதனையே அதிகமாகக் கையாண்டதிலிருந்தும், அப்பெயரையே தம் முதல் தொகுப்புக்குத் தலைப்பாகவும் கொண்டதிலிருந்தும் அறியலாம். இதழ்களில் எழுதும்போது இந்தப் புனைபெயர் பெரும்பாலும் மேற்கோள் குறிக்குள் அமைந்துள்ளது. இது ஒரு புனைபெயர் என்று சுட்டுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அவர் நூல்களில்

21