பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் போதையிலிருக்கும் பொழுது மாமிச உணவைப் பழக்கப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தான்.

மீனாள் பிராமணப் பெண் ஆவது போய், கோபாலய்யங்கார் இடையனானார்.

3

கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.

இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.

தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரியானாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார்.

இதை மறப்பதற்குக் குடி.

ஆபீஸிற்கு போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி.

வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி.

இப்பொழுது அவர்கள் தென்னாற்காட்டு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.

இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.

"ஏ! பாப்பான்!" என்று மீனாள் கொஞ்சுவாள்.

"என்னடி எடச்சிறுக்கி!" என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.

இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.

மீனாளின் 'டிரியோ, டிரியோ' பாட்டில் கோபாலய்யங்காருக்கு - அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம்.

மணிக்கொடி, 9.12.1934

226

கோபாலய்யங்காரின் மனைவி