சணப்பன் கோழி
பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் - பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று - உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம். காலை மடக்கிக் கொண்டு முரண்டு செய்யும் மாடு என்றால் வாலைக் கடித்தாவது எழுப்பலாம்; பரமேச்வரனுக்கு வாலில்லையே!
மனிதனுடைய வாழ்க்கையில் - தென்னிந்தியத் தமிழனுடைய வாழ்க்கையில் - வேலையை எதிர்பார்த்துக் காலத்தைக் கலாசாலையில் கழித்துப் படிக்கவைக்கும் முதல் முக்கியத்திற்குப் பிறகு, பெரிய இடத்துப் பெண்ணை - கை நிறையப் பணம் கொண்டுவரும் பெண்ணை - கலியாணம் செய்து வைப்பது இரண்டாவது முக்கியமான விஷயம். தான் பென்ஷனாவதற்குள், தன் மகனுக்கு வேலை பார்த்துக் கொடுத்துவிட்டு, தன் அந்திமக் கிரியைகளைப் பையன் சரியாக நடத்தும் நிலையில் கொண்டு வந்து வைப்பது மூன்றாவது வேலை.
பரமேச்வரனுடைய தகப்பனாருக்கு முதல் வேலை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இரண்டாவதோ, அவருக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.
பையன் பெரிய இடத்துப் பெண்ணை, கை நிறையப் பணமும் கழுத்து நிறைய நகையும் போட்டுவரும் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். பையனது தர்க்கம் தகப்பனாருக்கு விளங்கவில்லை. சுகமாக இருக்க விரும்புவது மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில்
புதுமைப்பித்தன் கதைகள்
227