பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'புதுமைப்பித்தன் கதைகள்', 'ஆண்மை' ஆகியவற்றின் தலைப்புப் பக்கத்தில் மேற்கோள் குறி பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ரா. ஸ்ரீ. தேசிகன் முன்னுரையிலும், 'ஆண்மை' முன்னுரையிலும் மேற்கோள் குறி உள்ளது. 'ஆறு கதைகள்', 'நாசகாரக் கும்பல்', 'காஞ்சனை' ஆகியவற்றின் முகப்புப் பக்கத்தில் மேற்கோள் குறி உள்ளது.

1935க்குப் பிறகு அவர் புதுமைப்பித்தன் என்ற பெயரில் மட்டுமே கதைகளை வெளியிட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. 'தமிழ்மணி' 1944ஆம் ஆண்டுப் பொங்கல் மலரில் வெளிவந்த 'சிவசிதம்பர சேவுகம்' மட்டுமே 'சொ. வி. என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதே மலரில் வெளியான . அரிஸ்டாட்டில் கண்ட ராஜிய பிராணி என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரை புதுமைப்பித்தன் என்ற பெயரில் வந்துள்ளது. இரண்டு படைப்புகளுக்குமான பெயர்கள் இடம் மாறிவிட்டன எனக் கொள்ள இடமுண்டு.

கவிதைகளைப் பொறுத்தமட்டில் அச்சில் வெளிவந்த அவருடைய முதல் கவிதையான 'திரு. ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாழ்வார் வைபவம்' புதுமைப்பித்தன் என்ற பெயரிலேயே வெளியாகி இருக்கிறது. மார்ச் 1945 'கலாமோஹினி'யில் வெளிவந்த 'இணையற்ற இந்தியா'கூட இந்தப் பெயரில்தான் வந்திருக்கிறது. அதற்குப் பின்பே வேளூர் வெ. கந்தசாமிப் பிள்ளை/கவிராயர் என்ற புனைபெயர்களைக் கையாண்டிருக்கிறார்.

சொ. வி., ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, இரவல் விசிறிமடிப்பு, சுக்ராசாரி என்பவற்றைப் புதுமைப்பித்தனுடைய பிற புனைபெயர்களாக ரகுநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.

'இரவல் விசிறிமடிப்பு' என்ற பெயரில் எழுதிய மதிப்புரைகள் இதுவரை கிடைக்கவில்லை. 'தினசரி' இதழ்கள் கிடைக்கப் பெறும்போது இந்நிலை மாறலாம். 'சுக்ராசாரி' என்ற பெயரில் எந்தப் படைப்புமே இதுவரை தட்டுப்படவில்லை. 'நந்தன்' என்ற பெயரில் வந்த ஐந்து கதைகளில் எதுவும் புதுமைப்பித்தன் காலத்தில் நூலாக்கம் பெறவில்லை என்பது முன்னமே சுட்டப்பட்டது.

'கபாலி' என்ற புனைபெயரைப் பொறுத்தமட்டில், சென்னையிலிருந்து வெளிவந்த 'ஊழியன்' முதல் இதழிலேயே (6.7.1934) 'பட்டணத்து சேட்டை' என்றொரு கதை 'காபாலி' ('கபாலி' அல்ல) என்ற பெயர் தாங்கி வந்துள்ளது. அதன் பின்னர் 'ரயில் அடியில் தற்கொலை' (ஊழியன்' 10.8.1934), 'என் மடத்தனம்' (ஊழியன்' 30.11.1934 ஆகிய கதைகள் 'கபாலி' என்ற பெயரில் வந்துள்ளன. 'ஊழியன்' சென்னைக்கு இடம் மாறிய உடனேயே புதுமைப்பித்தன் அதில் சேர்ந்ததாகத் தகவல் இல்லையாதலாலும், 'ஊழிய'னில் அவருடைய பெயர் தாங்கிய முதல் படைப்பு ( 'தெரு விளக்கு') அதற்கு ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே வருவதாலும், 'கபாலி' என்ற பெயரில் வெளியானவற்றைப் புதுமைப்பித்தனுடையனவாகக் கொள்ள இயலவில்லை.

இந்த நிலையில், ஒரு புதிய புனைபெயர் தட்டுப்பட்டுள்ளது. 'மாத்ரு' என்ற பெயரில் 'ஊழிய'னில் (12.10.1934) வெளியான 'கதைகள்' என்ற கட்டுரை 'புதுமைப்பித்தன் கட்டுரைகள்' (ஸ்டார் பிரசுரம், 1954) நூலில்

22