பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'சிறுகதை 3' என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் மறைந்த பிறகு தொகுக்கப்பட்ட நூலாயினும், இது அவருடைய கட்டுரைதான் என்பதை இனங்காட்டும் சில தொடர்கள் - முக்கியமாகச் சிறுகதையை வாழ்க்கையின் சாளரமாகக் காணும் உருவகம் - புதுமைப்பித்தனின் பிற படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. 'மாத்ரு' என்ற இதே புனைபெயரில் 'நானே கொன்றேன்!' என்றவொரு கதை 'ஊழியன்' (21.9.1934) இதழில் - அதாவது 'கதைகள்' கட்டுரை வெளிவருவதற்கு முன்பே - வெளிவந்துள்ளது. எனவே, இந்தக் கதை இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, புதுமைப்பித்தனின் ஒவ்வொரு படைப்பும் எந்தப் புனை பெயரில் வெளிவந்தது என்பது பல்வேறு வகையில் முக்கியத்துவமுடையதாகிவிட்ட நிலையில், புனைபெயர் பற்றிய தகவலும் பின்னிணைப்பு 3இல் வழங்கப்பட்டுள்ளது.

கதையும் காலமும்

புதுமைப்பித்தன் தம் வாழ்நாளில் வெளியான கதைத் தொகுதிகளுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகளிலும், தம் கதைகள் எழுதப் பெற்ற காலத்தை முன்வைத்தே தாம் சொல்ல வந்ததைக் கூற முற்படுகிறார்.

கருத்து மாற்றம்/வளர்ச்சியைப் பற்றி பெர்னார்டு ஷா கூறிய கருத்தைத் தோற்றுவாயாகக் கொண்டே 'ஆண்மை' முன்னுரை தொடங்குகிறது. "இக்கதைகள் யாவும் நான் எழுத ஆரம்பித்துச் சுமார் ஆறு மாதங்களுக்குள் அமைந்த மனநிலையைக் காட்டுவனவாகும்" என்று அத்தொகுதியில் இடம்பெற்ற எட்டுக் கதைகளை அறிமுகம் செய்கிறார் புதுமைப்பித்தன்.

'காஞ்சனை' முன்னுரையிலும்,

இந்தக் கோவையிலே, என் கதைகளிலே மேலோட்டமாகப் பார்க்கிறவர்கள்கூட இரண்டு ரகமான வார்ப்புத் தன்மை இருப்பதைப் பார்க்கலாம். சில, 1943ஆம் வருஷத்துச் சரக்கு; மீதமுள்ளவை 1936க்கும் அதற்கு முன்பும் பிறந்தவை; 1943ஆம் வருஷத்துச் சரக்குகளை 1943 ஆம் வருஷத்து ஆசாமிகள் பாராட்டுகின்றனர். அதைப் போலவே, 1936ஆம் வருஷத்துச் சரக்கையும் அந்தக் காலத்து 'இவர்கள்' பாராட்டினார்கள்

என்று தொடங்கி, "1943ஆம் வருஷத்துச் சரக்குகளைப் பற்றியே சில சர்ச்சைகள்..." எனத் தொடர்கிறார்.

தம் கதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவை பிறந்த காலம் பற்றிய ஓர்மை வேண்டும் என்ற கருத்துடைய புதுமைப்பித்தனின் கதைகள் முறையாகவோ, முழுமையாகவோ வகைதொகைப்படுத்தப்பட்டு வெளிவர வாய்ப்பில்லாமல் போய்விட்டது நகைமுரணுடையது.

நவயுகப் பிரசுராலயம் வெளியிட்ட 'புதுமைப்பித்தன் கதைகள்', 'ஆறு கதைகள்', 'நாசகாரக் கும்பல்' ஆகியவை நேர்த்தியாகவும், நல்ல

23