பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஆமாம்."

"அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? ஞாபகப்படுத்திப் பார்; அது ஒரு மலையாளப் பெண் கொடுத்தது என்று உனக்குச் சொல்லி இருக்கிறானா?"

"ஆமாம் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கிறது."

"அதைப் பிணத்தின் மீது காணோமே! நீ எடுத்தாயா?"

"ஆம்! நான் தான் எடுத்தேன்" என்றான் கிட்டு.

ஒரு மௌனம். அமிர்தலிங்கம் விரல்களைச் சுடக்கிக் கொண்டார். "அதை எங்கே வைத்தாய்?"

"அப்பா நீங்கள் என்னை இந்த ஸ்திதியில் இப்படி 'கிராஸ் எக்ஸாமினேஷன்' செய்தால்! மிகவும் களைப்பாக இருக்கிறது. மங்களத்தைக் கூப்பிடுங்கள்..."

"கிட்டு அப்படி ஒன்றுமில்லை. தெரிந்தவரை சொன்னால் அனாவசியமாக நேரம் கழியாது..."

"அந்த மோதிரத்தை எடுத்து நானே எறிந்துவிட்டேன். எங்கே போட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை."

"மனம் குழம்பியிருந்திருக்கும். ஞாபகப்படுத்திப் பார்."

"பிரயோஜனமில்லை" என்றான் கிட்டு சற்றுநேரம் கழித்து.

"நீதான் அவனுடைய புஸ்தகத்திற்குப் பின் ஒளித்துவைத்தாயா?" என்றார்.

கிட்டுவின் முகம் மலர்ந்தது. "ஆமாம் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. அங்கேதான் வைத்தேன்" என்றான்.

"அப்படியா நன்றாக அர்த்தமாகிவிட்டது. சின்ன விஷயம். குழப்பத்தை விளக்கிவிட்டாய்."

"போய் வாருங்கள் அப்பா! நீங்கள் வந்ததற்கு... மங்களத்தைப் பார்த்துக் கொள்ளுவீர்களா?"

அமிர்தலிங்கத்தின் கண்களில் நீர் துளித்தது.

"இன்னும் சந்தேகமா?" என்றார்.

அமிர்தலிங்கம் வெளியே வந்து மோட்டாரில் ஏறினார். உள்ளிருந்து விம்மியழும் அழுகைக் குரல் கேட்டது.

அந்தக் கேஸில் அமிர்தலிங்கம் கடைசியாகப் பேசும்பொழுது மோசமாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரே குற்றவாளிக்குப் பரிந்து பேசுவது போல பட்டது.

அவர் தமது மகனுடைய கடிதத்தை வெளியில் எடுக்கவேயில்லை.

ஜூரர்கள் அவனைக் குற்றவாளி என்று அபிப்பிராயப்பட்டார்கள். தீர்ப்புக் கூற நீதிபதி கருப்புக் குல்லாவை அணிந்து கொண்டார்.

திவான் பகதூர் அமிர்தலிங்கமும் ஜூனியரும் வெளியே வந்தார்கள்.

புதுமைப்பித்தன் கதைகள்

247