பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாளிலும், செப்பமாக மெய்ப்புப் பார்க்கப்பட்டும் வெளியாயினவாயினும், புதுமைப்பித்தன் அவற்றுக்கு முன்னுரை எதுவும் எழுதவில்லை. 'புதுமைப்பித்தன் கதைக'ளுக்கு மட்டும் ரா. ஸ்ரீ. தேசிகனின் அருமையான அணிந்துரை அமைந்திருந்தது. கலைமகள் காரியாலயம் வெளியிட்ட 'காஞ்சனை' கவனமாக மெய்ப்புத் திருத்தப்பட்டு வெளிவந்திருந்தாலும், உலகப் போர்க்காலமாதலால் மட்டத் தாளிலேயே அச்சிடப்பட்டிருந்தது. 1947இல் வெளியான 'ஆண்மை' போர்க் காலத்திற்குப் பிந்திய காகிதக் கட்டுப்பாட்டின் காரணமாகவோ என்னவோ மிக மெல்லிய தாளில், சரியாக மெய்ப்புப் பார்க்கப்படாமல், சீராக மை ஒற்றாமல் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நூல்களிலும் தொகுக்கப்பட்ட கதைகள் புதுமைப்பித்தனால் தேர்ந்தெடுக்கப்பட்டு-அல்லது குறைந்தபட்சம் அவருடைய ஒப்புதலோடு - வெளிவந்துள்ளன என்றாலும் இவற்றில் மொத்தம் 48 கதைகளே வெளியாகியுள்ளன. அதாவது, அவர் எழுதிய கதைகளில் செம்பாதி அவருடைய வாழ்நாளில் நூலாக்கம் பெறவில்லை. 'சித்தி', 'சிவசிதம்பர சேவுகம்', 'நிர்விகற்ப சமாதி', 'நிசமும் நினைப்பும்', 'எப்போதும் முடிவிலே இன்பம்', 'கபாடபுரம்', 'அன்று இரவு', 'படபடப்பு, 'அவதாரம்', 'கயிற்றரவு' ஆகிய முக்கியமான பிற்காலக் கதைகள் மட்டுமல்லாமல், 'கோபாலய்யங்காரின் மனைவி', 'பால்வண்ணம் பிள்ளை' முதலான தொடக்க காலக் கதைகளும், 'உபதேசம்', 'புரட்சி மனப்பான்மை', 'அபிநவ-ஸ்நாப்', 'விபரீத ஆசை', 'சாமியாரும் குழந்தையும் சீடையும்' ஆகிய இடைக்காலக் கதைகளும் அவர் காலத்தில் தொகுக்கப்படாமல் போய்விட்டன. எனவே, புதுமைப்பித்தன் காலத்தில் நூல் தொகுப்பில் இடம்பெறாத ஒரே காரணத்தை முன்னிட்டு எந்த ஆய்வு முடிவையும் எடுத்துவிட முடியாது.

புதுமைப்பித்தனின் கடைசிக் காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடியின் காரணமாகப் பல பதிப்பாளர்களுக்கும் தம் கதைகளை வெளியிடக் கொடுத்திருக்கிறார். இதன் விளைவாகவும், அவர் மறைவுக்குப் பிந்திய குழப்பத்தையும், கமலா விருத்தாசலத்தின் நிராதரவான நிலையினையும் பயன்படுத்திக்கொண்டும் ஒழுங்கற்ற சில பதிப்புகள் வெளிவந்தன. கமலா விருத்தாசலத்தின் சார்பாக ஸ்டார் பிரசுரம் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்ட பிறகே தமிழ்ச் சுடர் நிலையம் வழி வெளியான கதைகள் மீட்கப்பட்டு வரிசையாகப் புதுமைப்பித்தன் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாகவும், ஒரே கதை ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்பில் வெளிவந்துள்ளது. 'விபரீத ' ஆசை'யும் 'எப்போதும் முடிவிலே இன்ப'மும், தமிழ்ச் சுடர் நிலையம் வெளியிட்ட 'அவளும் அவனும்', முல்லை வெளியீட்டின் 'விபரீத ஆசை' ஆகிய இரண்டு தொகுப்பிலும் இடம்பெற்றன. 'நிசமும் நினைப்பும்', 'அன்று இரவு' ஆகிய இரண்டும் 'கபாடபுரம்' தொகுப்பிலும் 'விபரீத ஆசை' தொகுப்பிலும் வெளிவந்தன. 'ஆறு கதைகள்' தொகுப்பு முழுவதும் 'கபாடபுரத்'தில் இடம் பெற்றது.

இந்தக் குழப்பங்கள் போதாதென்று கமலா விருத்தாசலம் எழுதிய 'மன நிழல்' கதை புதுமைப்பித்தனின் 'அவளும் அவனும்' கதைத்

24