பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகுப்பில் சேர்ந்துவிட்டது. 'கருச்சிதைவு என்ற கதை 'அபார்ஷன்' என்று பெயர் பெற்று அதே தொகுதியில் இடம் பிடித்துக்கொண்டது.

தொகுக்கப்பெறாமல் விடுபட்ட கதைகளையெல்லாம் சேர்த்து வெளிவந்த ஸ்டார் பிரசுரத்தின் 'புதிய ஒளி' தொகுதி கதைகள் பற்றிய முதல் வெளியீட்டு விவரங்களை முழுமையாகத் தராததால், புதுமைப் பித்தன்மீது இலக்கியத் திருட்டு என்ற பழியைச் கமத்துவதற்கு வழி யேற்பட்டுவிட்டது. இது மட்டுமல்லாமல், கதைகள் வெளிவந்த ஆண்டைத் தவறாகக் குறித்ததால், எம். வேதசகாயகுமார் அதை நம்பித் தயாரித்த ஒரு காலவரிசைப் பட்டியலில் சில பிழைகள் நேர்ந்துவிட்டன (எ-டு: 'அவதாரம்' வெளிவந்த ஆண்டு 1940 அன்று, 1947). மேலும், 'மணிக்கொடி'யில் நடைச்சித்திரம் என்று குறிப்பிடப்பட்டு வெளியான 'திருக்குறள் குமரேசப் பிள்ளை'யும், 'செல்வம்' என்ற கட்டுரையும் கதைத் தொகுப்பில் சேர்ந்துவிட்டன.

ஐந்திணைப் பதிப்பிலும் இப்பிழைகள் மறு உற்பத்தியானதோடு மட்டுமல்லாமல், வேதசகாயகுமார் எடுத்துக் கொடுத்ததின் பேரில் புதுமைப்பித்தன் எழுதாத ஒரு கதையும் சேர்க்கப்பட்டுவிட்டது. 'சாளரம்' என்ற இந்தக் கதை 'ஆனந்த விகடன்' 12.11. 1933 இதழில் 'பித்தன்' என்ற பெயரில் வந்ததாகும். (இந்த இதழ் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது.) 'பித்தன்' என்ற பெயரைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தியதற்குச் சான்று இல்லை; 'ஆனந்த விகட'னில் எழுதியதாகவும் சான்றில்லை. மேலும், அவருடைய முதல் படைப்பு எனக் கருதப்படும் 'குலோப்ஜான் காத'லுக்கு முந்தி வெளி வந்ததாகவும். இது இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, 1934க்கு முன்பு புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்து வாழ்ந்ததாகத் தகவல் இல்லாத நிலையில், சென்னை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட -அடையாறிலிருந்து மயிலாப்பூர் வரையான பேருந்துப் பயணம் பற்றிய - ஒரு கதையை அவர் எழுதியிருப்பார் என்று எண்ண இடமில்லை.

இந்தப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் கதைகள் அனைத்தும் வெளியான காலத்தைக் கண்டுபிடித்து, காலவரிசையில் வெளியிடுவது திறனாய்வுக்கு மட்டுமன்றி, ஆர்வமுள்ள வாசகனுக்கும்கூடப் பயனுடையது. அவ்வகையில், இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள 97 கதைகளையும் அவை முதன்முதலில் வெளிவந்த காலத்தைக் கொண்டு வரிசைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட ஏழு கதைகளுக்குக் காலத்தைக் கணிக்க இயலவில்லை. 'சுப்பையா பிள்ளையின் காதல்கள்', 'கொன்ற சிரிப்பு', 'பொய்க் குதிரை', 'கருச்சிதைவு', 'இந்தப் பாவி', 'சொன்ன சொல்', 'இலக்கிய மம்ம நாயனார் புராணம்'. இவற்றில் 'கொன்ற சிரிப்பு' முதலில் 'புதுமைப்பித்தன் கதைக'ளில் வந்ததாலும், 'பொய்க்குதிரை', 'கருச் சிதைவு' ஆகியன 'ஆறு கதைக'ளில் வந்ததாலும் இவை 1941க்கு முற்பட்டவை என்று கொண்டு 1939இல் வெளியான 'செவ்வாய் தோஷ'த்துக்குப் பின்பும், 1941இல் வெளியான 'மகாமசான'த்திற்கு முன்பும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 'சுப்பையா பிள்ளையின் காதல்-

25