பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்' 'காஞ்சனை'யில் இடம் பெற்றுள்ளதால், 1943க்கு முன்பு வெளியானதெனக்கொண்டு அக்டோபர் - நவம்பர் 1943இல் வெளியான 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதைக்குப் பின்பும், ஜனவரி 1944 இல் வெளியான 'சித்தி'க்கு முன்பும் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, வேதசகாயகுமார் முதலில் கண்டெடுத்துக் 'கொல்லிப் பாவை'யில் (ஏப்ரல் 1986) வெளியிட்ட 'கண்ணன் குழல்', 'நம்பிக்கை' ஆகியவற்றுக்கு அவருடைய கூற்றையே ஆதாரமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. 'கண்ணன் குழல்' மட்டும் 'காந்தி' 5.9.1934 இதழில் வெளிவந்ததை 'காந்தி' இதழை ஆய்ந்த பா. மதிவாணன் உறுதிப்படுத்தினார். 'மணிக்கொடி' 15.9.1934 இதழில் 'நம்பிக்கை' வெளியானதாக வேதசகாயகுமார் பட்டியல் கூறுகிறது. ஆனால் 'மணிக்கொடி' வார இதழ் 9.9.1934க்குப் பிறகு 16.9.1934இல்தான் வெளியாகியுள்ளது! வேதசகாயகுமார் தயாரித்துள்ள பட்டியலில் குறைந்தபட்சம் 20 கதைகள் பற்றிய தவறான, இட்டுக்கட்டிய தகவல்கள் உள்ள நிலையில், 'நம்பிக்கை' கதை பற்றிய முதல் வெளியீட்டு விவரங்கள் எச்சரிக்கையோடு வாசகர்களின்முன் வைக்கப்படுகின்றன. மூல இதழ்கள் என் பார்வைக்குக் கிடைக்காத நிலையில், 'கண்ணன் குழல்', 'நம்பிக்கை' ஆகிய கதைகளுக்கான பாடம் வேதசகாயகுமார் வழங்கியவாறே இப்பதிப்பில் தரப்பட்டுள்ளது. அவர் முதலில் கண்டெடுத்து வெளியிட்ட 'சாமாவின் தவறு' கதையை மூலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்ததில், ஆறு பத்திகள் இடம் மாறி அச்சிடப்பட்டு, பொருள் விளங்காத நிலையில் இருப்பதைக் கண்டேன். எனவே இக்கதைகளின் பாடங்களையும் எச்சரிக்கையோடு அணுகுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

'புதிய கூண்டு' கதை 'தினமணி பாரதி மலர் 1935'இல் வெளிவந்ததைக் கண்கூடாக நான் பார்க்கவில்லை. 'கலைமகள்' இதழில் மேற் குறித்த மலர் பற்றி வெளியான மதிப்புரையிலிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது. காட்சி அளவையின் படியல்லாவிட்டாலும் கருதல் அளவையின் பாற்பட்டு இத்தகவலை நம்பலாம். 'படபடப்பு' கதை 'கவிக் குயில்' முதல் மலரில் (1946) வெளிவந்ததென ரகுநாதனிடமிருந்து அறிந்துகொண்டேன். இந்தப் பன்னிரண்டு கதைகள் தவிரப் பிறவற்றுக்கெல்லாம் நானே கண்கூடாக, மூல இதழ்களிலிருந்து காலக் குறிப்புகளைத் தயாரித்துள்ளேன். 'எழுத்து' இதழ் மறுபதிப்புச் செய்ததைக் கொண்டு 'அன்னை இட்ட தீ'யில் சேர்க்கப்பட்டிருந்த 'ராம நாதனின் கடிதம்' கதையை அண்மையில் 'கதந்திரச் சங்'கை நேராகப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன்.

பாடவேறுபாடுகள்

புதுமைப்பித்தனின் எந்தச் சிறுகதையும் இதழ்களில் வெளிவராமல், நேரிடையாக நூலாக்கம் பெறவில்லை. அவர் காலத்தில் நூலாக்கம் பெற்ற 48 கதைகளும் முதலில் பத்திரிகைகளில் வெளிவந்தனவே. இரு கதைகள் ('புரட்சி மனப்பான்மை', 'விபரீத ஆசை') அவர் காலத்திலேயே இருமுறை பத்திரிகையிலே வெளியாகியுள்ளன. 'செவ்வாய் தோஷம்' கதை முதலில் 'சூறாவளி'யிலும், பின்பு 'ஆறு கதைகள்' தொகுப்பிலும், பிறகு அல்லயன்ஸ் வெளியிட்ட 'கதைக் கோவை 3'

26