திரையை விலக்கி அவளைப் பார்க்காததற்கு ஆச்சரியப்பட்டார். அந்த ஆச்சரியம் அவரை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்றது. அவரோ சைத்ரிகர் - அழகுத் தெய்வத்தின் அடிமை! கலியாணியின் சோகம் தேங்கிய கண்கள் அவருக்குக் கற்பனைக் கதையாக, காவியமாகத் தெரிந்தது. அன்று இரவு முழுவதும் உள்ளம் கட்டுக் கடங்காமல் கொந்தளித்தது.
சுப்புவையர், பாவம், அது ஒரு பிரகிருதி. அவர் வசம் கலியாணி பிணிக்கப்பட்டால் விதியின் அற்பத்தனமான லீலைகளை உடைத்தெறிய ஏன் மனம் வராது? அவரை மனிதனாகவே சர்மா நினைக்கவில்லை. அவரது சிறையிலிருந்து அவளை விடுவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதில் கலியாணியின் சம்மதம் - அதைப் பற்றிக் கூட அவருக்கு அதிகக் கவலையில்லை.
அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டால்... வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும்! இலட்சியத்திற்கு அவள் எவ்வளவு பெரும் ஊக்கமாக இருப்பாள். மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப்பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில் வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன?
அன்று முழுவதும் அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள் ஒரு நிரந்தரப் பைத்தியக்காரனுடைய உள்ளத்தையும் தோற்கடித்துவிடும். இரவு முழுவதும் விளக்கு அணைக்கப்படவில்லை. மூலையில் சன்னலை யொட்டியிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு விளக்கையே கவனித்துக் கொண்டிருந்தார். விளக்கின் சிமினி கரிபிடித்து மேலே புகையடைந்து வெளிச்சத்தை அமுக்கியது. இரண்டு நிமிஷம் விளக்கு 'பக் பக்' என்று குதித்தது. அவ்வளவுதான், அதுவும் அணைந்துவிட்டது.
அறை முழுவதும் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருக்க முடியவில்லை. மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே சென்றார் விடிந்துவிட்டது. ஆனால் நட்சத்திரங்கள் மறையவில்லை. கிழக்கே சற்று வெளுப்பு - வெள்ளைக் கீறல் மாதிரி.
சர்மாவுக்குக் காலையில் நடப்பது மனத்திற்கு நிம்மதியாக விருந்தது. அவர் வாய்க்கால் கரை வழியாகவே நடந்து கொண்டிருந்தார். சற்றுத் தூரம் சென்றவுடன் வயல் வரப்புகளின் மீது நடக்க ஆரம்பித்தார். தேகந்தான் ஏதோ யந்திரம் மாதிரி நடந்து கொண்டிருந்தது. மனம் மட்டும் தங்குதடையின்றிக் கலியாணியின் பின் சென்று விட்டது. "கலியாணியை அழைத்துச் சென்றுவிட்டால்? அதற்கு இசைவாளா? அதற்கு என்ன சந்தேகம்? பிறகு எங்கு போவது? எங்கு போனால் என்ன மனிதன் இருக்கும் இடத்தைத் தவிர...?"
சூரியோதயமாகிவிட்டது. முகத்திற்கு நேரே வெய்யில் விழுந்து கண்கூச ஆரம்பித்ததும், சர்மாவுக்கு 'வெகுதூரம் வந்துவிட்டோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடனே திரும்பி, குளத்தில் குளித்து விட்டுப் போவதென்று அப்பக்கமாகத் திரும்பி நடந்தார்.
புதுமைப்பித்தன் கதைகள்
277