பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலும் வெளியாகியுள்ளது. இது தவிர, 'படபடப்பு' கதைக்கு மட்டும் புதுமைப்பித்தன் கைப்பட எழுதிய படி கிடைத்துள்ளது. முற்றுப்பெறாத நாவலான 'அன்னை இட்ட தீ' அவர் காலத்தில் அச்சாகாததால், அது மட்டும் கையெழுத்து வடிவில்தான் கிடைத்துள்ளது.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களாக அவர் வாழ்நாளிலேயே வெளியானபோது பல மாற்றங்கள் - இலக்கணம் சார்ந்தும், மொழி நடை சார்ந்தும், பொருள் சார்ந்தும் - செய்யப்பட்டுள்ளமை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெரிய வருகின்றது. இந்த மாற்றங்களில் பல குறிப்பிடத் தகுந்தவை. புதுமைப்பித்தன் பற்றி மேலதிகமான, கூர்மையான விவாதங்கள் மிகுந்துள்ள சூழ்நிலையில் இவை பதிவு செய்ய வேண்டிய முக்கியத்துவமுடையவையே.

சில கதைகளுக்குப் புதுமைப்பித்தனே தலைப்பை மாற்றியிருக்கிறார். 'இது மிஷின் யுகம்!' என்ற கதை 'மனித யந்திரம்-?' என்ற பெயரிலேயே 'மணிக்கொடி'யில் (29.7.1934) வெளியானது. இன்று 'மனித யந்திரம்' என்று அறியப்படும் ஸ்டோர் குமாஸ்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய கதை, இதற்கு இரண்டரையாண்டுகளுக்குப் பிறகு அதே பெயரில் வெளிவந்தது ('மணிக்கொடி', 25.4.1937). 1940இல் வெளியான 'புதுமைப்பித்தன் கதைக'ளில் இவ்விரண்டு கதைகளும் இடம்பெறவே, ஓட்டல் சர்வர் பற்றிய கதை 'இது மிஷின் யுகம்! எனப் பெயர் மாற்றம் பெற்றது. (வேதசகாயகுமாரின் அட்டவணைப் பட்டியல், 'இது மிஷின் யுகம்!' கதை அந்தப் பெயரிலேயே, அதுவும் 'ஊழிய'னில் 1934இல் - தேதியும் குறிப்பிடாமல்!- வந்ததாக இட்டுக் கட்டிக் கூறுகிறது!)

'மணிக்கொடி' 12.8.1934இல் 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்' என்று மேற்கோள் குறிக்குள் வெளிவந்த கதை 'ஆண்மை' தொகுதியில் 'தனி ஒருவனுக்கு' எனப் பெயர்ச் சுருக்கம் பெற்றுள்ளது. 'மணிக்கொடி' யில் (18.11.1934) 'ஆண் சிங்கம்' என்று பெயர் பெற்ற கதை 'புதுமைப் பித்தன் கதைக'ளிலும் அதே பெயரில் வெளிவந்தது. ஆனால், 1947இல் 'ஆண்மை' எனப் பெயர்மாற்றம் பெற்று, நூல் தலைப்பாகவும் அமைந்துவிட்டது.

கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது.

என்று 'ஆண்மை' முன்னுரையில் கூற முற்பட்ட புதுமைப்பித்தன், "அந்த முறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கைவிட்டுவிட் டேன்" என்கிறார்.

முதற்கட்டத்தில் எழுதிய கதைகளில் இந்தத் 'தவளைப் பாய்ச்சல் நடை' வெகு துலக்கமாக இருக்க, நூற்பதிப்பிலே ஏராளமான இடங்களில் வாக்கிய அமைப்பை அவர் மாற்றியிருக்கிறார். எடுத்துக் காட்டாக, "கோபித்துக் கொள்ளுவாரோ, மரியாதைக் குறைவாகப்

27