பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசியதற்கு என்ற நினைவில் விம்மினாள்" ('ஆண்சிங்கம்', 'மணிக் கொடி' 18.11.1934) என்ற வாக்கியத்தை "மரியாதைக் குறைவாகப் பேசியதற்குக் கோபித்துக்கொள்ளுவாரோ என்ற நினைவில் விம்மி னாள்" ('ஆண்மை' தொகுதி) எனப் புதுமைப்பித்தன் மாற்றியுள்ளார்.

'வழி' கதையில் "இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை. 'தேவை'யென்று பெரிய எழுத்துக்களில்" என்று 'மணிக்கொடி'யில் வந்திருக்க, முற்றிலும் ஆங்கில மொழி அமைதி சார்ந்த (அச்சுமுறை பற்றிய ஓர்மை மிகுந்த) இரண்டாவது வாக்கியம் 'ஆறு கதைகள்', 'ஆண்மை' ஆகிய இரண்டு நூல்களில் இக்கதை தொகுக்கப் பெற்ற போது இடம்பெறவில்லை.

சில கதைகளில், நூலாக்கம் பெறும்போது கடைசி வாக்கியத்தைப் மிகையென்று நினைத்து - புதுமைப்பித்தன் நீக்கியிருக்கிறார். ('சாயங் கால மயக்கம்', 'வழி'). சில கதைகளில் கடைசியில் ஒரு வரியைச் சேர்த்திருக்கிறார் (ஆண்மை).

சில கதைகளில் சில சொற்களை மட்டும் மாற்றியிருக்கிறார் புதுமைப்பித்தன். 'மகாமசானம்' மற்றும் 'செல்லம்மாள்' கதைகள் 'கலைமக'ளில் வந்தபோது பயன்படுத்தப்பட்ட 'சாவதானமாக' என்ற சொல் ஒரே சீராக 'சாவகாசமாக' என நூலாக்கத்தில் மாறியுள்ளது.

'மனித யந்திரம்', 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதைகளில் காசு பற்றிய செய்திகள் மாற்றப்பட்டுள்ளன. 1934இல் ஐந்தே காலணாவுக்குத் தூத்துக்குடிக்கு டிக்கெட் எடுக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1940இல் பத்தேகாலணா தரவேண்டியதாகிவிடுகின்றது!

'விநாயக சதுர்த்தி' நூலாக்கம் பெறும்பொழுது ஒரு முழுப் பக்கமே நீக்கப்பட்டுள்ளது. 'துன்பக் கேணி' நூல் வடிவம் பெற்றபொழுது, ஒவ்வொரு பிரிவின் தொடக்கத்திலும் இருந்த பாடல் வரிகள் நீக்கப் பட்டுள்ளன. 'கவந்தனும் காமனும்' கதையில் வாசகனைச் சுட்டும் முறை மாறியுள்ளது.

இவ்வாறு முக்கியத்துவமற்றவை, மிக முக்கியமானவை. குறிப்பிடத்தகுந்தவை, அழுத்திக் காட்டப்பட வேண்டியவை எனப் பல்வேறு வகையான பாடவேறுபாடுகளைக் காண முடிகின்றது. புதுமைப்பித்தன் பற்றிய பல விவாதங்களைத் தொடர்வதற்கு இப்பாடவேறுபாடுகளில் பல தொடர்புடையனவாக உள்ள நிலையில் அவை இப்பதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைச் செய்வதற்கு மூலபாடம் எது எனத் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் வேறுபட்ட பாடம் எதுவெனக் கொண்டு, பாடவேறு பாடுகளை முடிவு செய்ய முடியும்.'படபடப்பு', 'அன்னை இட்ட தீ' ஆகியவற்றுக்கு மட்டுமே கையெழுத்துப் படிகள் கிடைத்துள்ள நிலையில், புதுமைப்பித்தன் வாழ்நாளில் வெளியான நூற்பதிப்புகள் மூல பாடமாகக் கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்தோ, திருத்தியோ, அவருடைய ஒப்புதல் பெற்றோ அப்பதிப்புகள் வந்திருக்கின்றன எனக் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதழ்களில் வெளியான முந்தைய வடிவங்களை வேறு பாடமாகக் கொண்டு பாட

28