காணவில்லை. உடனே, கி.மு. பிள்ளையை எழுப்பிக் காண்பித்துவிட்டு, சவுக்கையின் பக்கத்தில் கிடந்த தலையாரித் தேவனை எழுப்பிச் சமாசாரம் சொன்னார்கள்.
தலையாரித் தேவனுக்கு வெள்ளையன்மீது சந்தேகம். உடனே அவன் வீட்டிற்குச் சென்று பார்க்க, மருதி மட்டுமே அங்கிருந்தாள். புருஷன் எங்கே என்று மூவரும் நின்று விசாரிப்பதைப் பார்த்து, உள்ளுக்குள் பயந்துகொண்டு, தன் புருஷன் அவ்வளவு நேரம் வீட்டிலிருந்துவிட்டு அப்பொழுதுதான் வெளியே போனான் என்று ஒரு பொய் சொன்னாள்.
அவள் சொல்வது நிஜமா பொய்யா என்பதைத் தீர்மானிப்பதற்குத் தலையாரித் தேவனுக்கு ஒரே வழிதான் தெரியும். உடனே தலை மயிரைப் பிடித்திழுத்து, அவளைக் கீழே, தள்ளி, உதைக்க ஆரம்பித்தான். தேவனுக்கு மருதியை உதைப்பதில் ஒரு குஷி.
அவள் குய்யோமுறையோவென்று கத்தினாலும் தலையாரித்தேவனின் ஜம்பம் சாயவில்லை. அதற்குள் சேரி திரண்டது. களவு விவரமும் பரவியது. வெள்ளையனை இரவு வெகு நேரம் வரை கள்ளுக்கடையில் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள்.
பிறகு என்ன? மருதி எவ்வளவு கூச்சல் போட்டும் பயனில்லை. வெள்ளையன் பனங்காட்டில் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்ததைக் கண்டுகொண்டார்கள். ஆள் விடப்பட்டவுடன், அவன் உண்மையில் திருடாமல் இருந்தாலும் என்ன? விஷயம் வெகு எளிதில் போலீஸ் கேசாக மாறி, வெள்ளையன் சிறைக்குச் சென்றான்.
அவன் சிறை செல்லுமட்டும் ஊர் அல்லோலகல்லோலம்தான். முடிவில்லாமல், சளைக்காமல், பேசுவதற்குச் சமாசாரங்கள் நிறைந்திருந்தன. பண்ணைப் பிள்ளையவர்கள் என்ன முட்டிக்கொண்டும் மாடுகள் வந்தபாடில்லை. அதற்காக வெள்ளையன் பயலைச் சும்மா விடுகிறதா? ஏமாற்றிய பணத்திற்காவது அங்கு போய்விட்டு வரட்டுமே என்பதுதான் அவருடைய வாதம்.
இந்தக் களேபரக் காலத்தில் மருதிக்கு இரண்டு மாதம், அவளைப் பொறுத்தவரை, சேரியில் கிடைக்கும் சௌகரியங்களுக்குத் தகுந்தவாறு, வெள்ளையனுடன் 'கண்ணாலம்' செய்து கொள்ளும்பொழுது வாழ்க்கை இன்பகரமாகத்தான் ஆரம்பித்தது. புது மாப்பிள்ளை என்ற உற்சாகத்தில் அவன் வண்டியும் மாடும் வாங்கி இக்கோலமாகும் என்றிருந்தால் அவள் என்ன செய்ய முடியும்? வெள்ளையன் மீது அவளுக்கு அளவுகடந்த பிரியந்தான். இருவரும் கள்ளைக் குடித்துவிட்டு அடிக்கடி சச்சரவிட்டுக் கொண்டாலும் சேரியின் திருஷ்டி தோஷத்தைப் பெற்றிருப்பார்கள். எப்படியோ வெள்ளையன் சிறை சென்றான். மருதி அப்பன் வீடு சென்றாள். பிள்ளையவர்களுக்கு ஏச்சும் இரைச்சலுந்தான் மிச்சம். ஆனால், வெள்ளையன் சிறைக்குப் போனதில் பணத்திற்குப் பதிலாக ஒரு திருப்தி.
எங்கு பார்த்தாலும் பணமுடையாகவும் நிலங்கள் தீய்த்து போயும் இருக்கும் காலத்தில், அப்பன் வீடானாலும், அன்பையும் ஆதரவையும்
புதுமைப்பித்தன் கதைகள்
289