பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவிர வேறு என்ன கிடைக்கப் போகிறது. அதிலும் ஏழைப் பறையனாக இருக்கும்பொழுது? அந்தச் சமயம் பார்த்துச் சாலைக்குக் கப்பி போட ஆரம்பித்தார்கள். மருதிக்கும் அவள் பெற்றோருக்கும் சிறிது வேலை கிடைத்தது. இரண்டு மூன்று மாதம் கையில் காசு ஓட்டம். வீட்டிலே, புருஷன் அநியாயமாகச் சிறை சென்றான் என்பதைத் தவிர வேறு ஒரு கவலையும் இல்லாமல் இருந்தது.

எப்பொழுதும் சாலையில் கப்பி போட்டுக்கொண்டேயிருக்க ஜில்லா போர்டிற்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? மறுபடியும் கஷ்ட சக்ரம் அவர்கள் மீது சுழல ஆரம்பித்தது.

அப்பொழுது தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைச்சேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! அதற்காகத் திரைகடலோடிச் சுதந்திரத்தைப் பணையம் வைத்தால் என்ன? கடைசியிலாவது ஏதாவது மொத்தமாகக் கொண்டுவரலாமே!

மருதியும் அவளுடைய தாயாரும் கங்காணியுடன் கொழும்புக்குப் புறப்பட்டார்கள்.

3

விஸ்வாமித்திரரும் வியாசரும் மலைக்குச் செல்வதற்குக் காரணம் ஒன்று; மிஸ்டர் ஸ்டோ டார்ட், ஐ.ஸி.எஸ்., மலைக்குச் செல்வதற்குக் காரணம் வேறு; ஸ்ரீமதி மருதியம்மாள் மலைக்குச் செல்வதென்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ரிஷிகளின் பூர்வாசிரமத்தைப் பற்றி ஆராய்வது நாஸுக்கில்லை என்று கூறுவார்கள். மருதியம்மாளின் மலைவாசத்தைப் பற்றியும் அப்படித்தான்.

'வாட்டர் பால்ஸ்' என்பது தேயிலைத் தோட்டத்திற்காகவே தெய்வத்தினால் இலங்கையில் சிருஷ்டிக்கப்பட்ட இடம் என்பது கிரௌன் தேயிலைத் தோட்டத்தின் தற்போதைய முதலாளியான ஸர் ஜோஸப் பிட்ஜ்மார்ட்டின் கிரௌனின் திட்டமான, அபிப்பிராயம். இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால், ஸர் ஜோஸப் சீமையை விட்டுச் சிறிதாவது விலகியதே கிடையாது. இங்கிலீஷ் 'பீப்'பும் (மாட்டுக்கறி), இங்கிலீஷ் 'பேக்க'னும் (பன்றி இறைச்சி) அவர் சொந்தப் பார்வையிலேயே தயாரிக்கப்படாத தேசம் அவர் தேகத்திற்கு ஒத்து வராது என்று அவருடைய ஹார்லி தெரு (லண்டனில் பிரபல வைத்தியர்கள் வசிக்குமிடம்) குடும்ப வைத்திய நிபுணர் அவருக்குக் கூறியிருக்கிறாராம். அதற்காக, மலேரியாவிற்கும் சூரிய உஷ்ணத்திற்கும் வருஷம் 2000 பவுனுக்கு ஈடு கொடுப்பதாக ஒப்புக் கொள்ளும் நபர்களிடம் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அவர் விட்டு விடுவது வழக்கம்.

தற்பொழுது பாட்ரிக்ஸன் ஸ்மித் என்றவர் 'வாட்டர் பால்'ஸில் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் 45 வயதுப் பிரம்மசாரி. அவருக்கு

290

துன்பக்கேணி