சுப்பன் கறார் பேர்வழி. உதை, அடி, அப்புறம் வசவு முதலியவை சாதாரணத் தண்டனைகள். இதைவிடக் கொடுமையானது அபராதம் பிடித்து வாரக்கூலியில் மண்ணைப் போடுவது.
அன்று ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டு வந்து, கொழுந்து எடுக்கப் போவதற்குச் சற்று நேரமாகிவிட்டது. கூடையைத் தோளில் போட்டுக் கொண்டாள். கங்காணிச் சுப்பன் சுற்றிப் பார்த்துவரும் இடத்தின் பக்கம் அல்லாமல் வேறு பக்கமாகச் செல்லவேண்டும் என்று பயந்து கொண்டே, தோட்டத்தின் மேல் பக்கமாகச் சென்று கொழுந்துகளை அவசர அவசரமாகப் பறித்துக்கொண்டிருந்தாள் மருதி. அப்பக்கத்தில் தேயிலைச் செடிகள் கொஞ்சம் உயரமாகச் செறிந்து வளர்ந்திருந்தன. மறுபக்கத்தில் தனக்கு உதவியான பேச்சியும் கங்காணிச் சுப்பனும் இருப்பதை அவள் பார்க்கவில்லை. அவர்கள் இருந்த நிலைமை அங்கு சர்வ சாதாரணம்.
ஆனால், இவள் நிற்பதைச் சுப்பன் பார்த்துவிட்டான். அவள் தன்னை ஒற்றுப் பார்க்கிறாள். அதனால் ஏதேனும் சச்சரவு வந்து துரை காதிற்கு எட்டிவிடும் என்ற பயம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எதிரியின் மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம். சுப்பனும் ஒரு ஜீவன் தானே!
சுப்பன் அவள் மீது பாய்ந்து, இரைந்து கொண்டே, உதைக்க ஆரம்பித்தான்.
மருதி, பேயோ என்ற நினைப்பில் கதிகலங்கிக் கல்லாக நின்றாள்.
சுப்பன், கூடையைப் பிடுங்கி, இலைகளை அவள் தலை வழியாகக் கொட்டி, நெஞ்சில் ஒரு மிதி மிதித்தான். கூடையில் இருந்தவை கொழுந்துகள் அல்லாமல் பெரும் பாகம் முற்றிய இலையாக இருந்ததைக் கண்டதும் சுப்பனின் கட்சி இன்னும் வலுத்தது. கையில் இருந்த கழியினால் நன்றாகச் சாத்திவிட்டு, அபராதம் போடுவதற்கு நேராக ஆபீஸைப் பார்த்து நடந்து விட்டான்.
பேச்சிக்குத் தடுக்க ஆசையிருந்தாலும் சுப்பன் என்றால் பெரும் பயம். அதுவுமல்லாமல் அவன் தன்னிடம் நல்லதனமாக நடந்துகொள்ளும்பொழுது அதைக் கெடுத்துக் கொள்ள மனமில்லை. செடி மறைவில் ஒதுங்கியிருந்தாள். அவன் ஓடிய பிறகு மருதியிடம் சென்று பார்த்தாள்.
மருதிக்குப் பேச்சு மூச்சில்லை. பக்கத்திலிருந்த ஓடையில் ஜலம் எடுத்து, அவள் முகத்தில் தெளித்து, நினைவு வரச் செய்தாள் பேச்சி.
மருதிக்குப் பிரக்ஞை வந்ததும் ஒரு பெரிய இருமல். அதில் இரண்டு மூன்று துளி இரத்தம் விழுந்தது.
கைத்தாங்கலாக மருதி குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
6
மருதிக்கு அதிலிருந்து எழுந்து நடக்கவும் ஜீவனற்றுப் போய்விட்டது. சில சமயம், வியாதியின் மகிமையால் சித்த சுவாதீனமற்று,
புதுமைப்பித்தன் கதைகள்
297