பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதையின் முதல் வெளியீடு, புனைபெயர். நூலாக்கம் ஆகியவை பற்றிய விவரங்கள் இதற்குப் பயன்படும்.

'மொப்பஸான் கதையின் தழுவு' என்ற துணைக் குறிப்புடன் 'மணிக் கொடி'யில் வெளியான 'தமிழ் படித்த பெண்டாட்டி'யைத் தவிர, ரகுநாதனால் மொப்பஸான் கதைகளைக் கொண்டு ஐயம்திரிபறத் தழுவல் என்று நிறுவப்பட்ட' 'நொண்டி', 'சமாதி', 'பயம்', 'கொலைகாரன் கை', 'நல்ல வேலைக்காரன்', 'அந்த முட்டாள் வேணு' ஆகிய ஆறு கதைகளும், ராபர்ட் பிரவுனிங் கவிதையைத் தழுவிய 'பித்துக்குளி' கதையும் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவுள்ள புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புக் கதைகளடங்கிய தொகுதியில் இவை தனியே சேர்க்கப்படும்.

'டாக்டர் சம்பத்', 'தேக்கங் கன்றுகள்', 'குற்றவாளி யார்?' (நானே கொன்றேன்!' கதையினையும் இவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம்) ஆகியவையும் தழுவல் கதைகளே என ரகுநாதன் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகத் தோன்றினாலும், மூலக்கதைகள் எவையெனக் கண்டு பிடிக்கப்பட்டு, ஒப்பிட்டு நிறுவப்படும்வரை அவற்றை இத்தொகுப்பி லிருந்து நீக்குவது பதிப்பு அறமாகாது.

இந்தப் பதிப்பு...

இந்தத் தொகுதியில் மொத்தம் 99 படைப்புகள் அடங்கியுள்ளன. 'சிற்றன்னை' குறுநாவலும், முடிவுபெறாத 'அன்னை இட்ட தீ' நாவலும் இனி வெளிவரவுள்ள தொகுதிகளின் பொருள் அமைதிக்குப் பொருந்தாமையால், இந்தக் கதைத் தொகுப்பின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. கதைகள் அனைத்தும் கால வரிசையில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் முதல் வெளியீட்டு விவரம் தரப்பட்டுள்ளது.

புதுமைப்பித்தன் தம் கதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகளும், ரா. ஸ்ரீ. தேசிகனின் மதிப்புரையும், 'ஆண்மை' நூலின் பதிப்புரையும் பின்னிணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தன் கதை நூல்கள் பற்றிய பதிப்பு விவரங்களும், அந்நூல்களில் இடம்பெற்ற கதைகளின் பட்டியலும் பின்னிணைப்பு 2இல் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான வடிவங்களைக் கருத்தில்கொண்டு திருத்தமான பாடமாக வெளியிடப் பட்டுள்ளது. வாசக அனுபவத்திற்குக் குறுக்கீடு இல்லாவண்ணம், பிற வடிவங்களோடு ஒப்பிடப்பட்டுப் பாடவேறுபாடுகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பாடவேறுபாடுகள் மூன்றாம் பின்னிணைப்பில், ஒவ்வொரு கதையின் முதல் வெளியீடு, புனைபெயர், நூலாக்கம், மூலபாடம் ஆகியவற்றுக்கு அடுத்து வழங்கப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படிகள் மற்றும் அவர் கைப்படச் செய்த மெய்ப்புத் திருத்தங்களும் பின்னிணைப்பு 4இல் தரப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் கதைகள் இதழ்களில் வந்தபோது உடன் சேர்த்து வெளியான ஓவியங்களும், பின்னிணைப்பு 5இல் தரப்பட்டுள்ளன.

30