குற்றாலம் பிள்ளை "அதோ, அங்கே" என்று ஒரு மூலையைக் காட்டினார். அவர் அதைச் சொல்லி முடிக்குமுன் டாக்டர் அந்த இடத்தையடைந்துவிட்டார். அவர் அந்த இடத்திற்குப் போய் மண்டிபோட்டு உட்கார்ந்து கீழே குனிந்து எதையோ உற்றுப் பார்த்தார். ஒரு நிமிஷம் அப்படியே இருந்துவிட்டு, எழுந்து திரும்பி வந்தார்.
வந்தவுடன், "அந்தக் கூஜாப் பாலில் சர்க்கரை போட்டிருக்கிறதா?" என்று ராமானுஜத்திடம் கேட்டார்.
ராமானுஜம், "இல்லை, சர்க்கரை போடாத பால்தான் கொண்டு வருவது வழக்கம். இங்கே வந்த பிறகு நடிகரின் இஷ்டத்தைக் கேட்டு சர்க்கரை போடுவோம்" என்று பதிலளித்தார்.
"சபேசய்யர் குடித்த பாலில் சர்க்கரை போட்டிருந்ததா?"
"ஆம் போட்டிருந்தது. காலணாவுக்கு வாங்கிக்கொண்டு வரச் சொன்னேன்."
"யார் வாங்கி வந்தது?"
"சபா வேலையாள் நடேசன்."
"அவன் இங்கே இருக்கிறானா?"
நடிகர்கள் கூட்டத்தின் பின்னால் லாயத்துக் குதிரைபோலக் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்த நடேசன் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லுவதுபோல் உலர்ந்த குரலில் 'எஜமான்' என்று கேட்டுக்கொண்டே முன்னால் வந்தான்.
டாக்டர் சம்பத், "இப்படி வா நடேசா, பயப்படாதே, இன்று எங்கே சர்க்கரை வாங்கினாய்?" என்றார்.
"மாமூலுப்போல எதுத்தாப்போல இருக்கற சாயபு கடையிலேதாங்க."
"சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்கும். யாராவது தேடிப்பாருங்கள்." அதுவரை சிலைகள்போல சுவாசத்தைக்கூட அளந்து விட்டுக்கொண்டிருந்த நடிகர்களிடையே கொஞ்சம் அசைவு தோன்றியது. ஒருவர் பின்புறம் குனிந்து, "இதோ இருக்கிறது" என்று ஒரு காகிதத் துண்டை நீட்டினார்.
அதை வாங்கி டாக்டர் சம்பத் பத்திரமாக மடித்து டிப்டி கமிஷனரிடம் நீட்டினார். பிறகு அவரிடம் "என் வேலை முடிந்தது. நாளை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின்போது மறுபடி பார்த்துக் கொள்கிறேன். சபேசய்யர் விஷத்தினால் இறந்திருக்கிறார். செம்பிலுள்ள பாலில் விஷம் இல்லை. அவர் குடித்த பாலில்தான் இருந்திருக்க வேண்டும். இனி உங்கள் பொறுப்பு" என்றார்.
அவசரம் அவசரமாகக் கேள்வி கேட்டல், குறுக்கு விசாரணைகள் எல்லாம் நடந்தன. லீலாவதி வேஷம் போட்ட குற்றாலம் பிள்ளைக்கும் சபேசய்யருக்கும் தொழில் முறையில் போட்டியுண்டு. இருவரும் போலீஸ் கோர்ட்டில் பிரபல வக்கீல்கள். போன வருஷம் குற்றாலம்
புதுமைப்பித்தன் கதைகள்
313