பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன ஏமாற்றம்!... ஆசை தான் வழிகாட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்!... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்?"

"நீதான் சாதித்தாய்! நீதான் பிரம்மா! உன் சாதனை தான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!" என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டே போனான்.

சாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.

மூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.

"சுவாமி, வரவேண்டும்! பைலார்க்கஸ், இப்படி வா!" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தன்... அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்!

"மூபாங்கோ, தீபம்!" என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.

"இங்கு கூடவா விளக்கு இல்லை! திரையை ஒதுக்கு! ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை!" என்று திரையை ஒதுக்கினான்.

இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபவொளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்ரகம்! விரிந்த சடையும் அதன் மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக் காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு!

சந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்...


328

சிற்பியின் நரகம்