பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமைப்பித்தன்:
ஆளுமையும் ஆக்கங்களும்

சுந்தர ராமசாமி

ன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.

இன்று பலர் தங்கள் ஆழ்ந்த உழைப்பைச் செலுத்திப் புதுமைப்பித்தனைப் பற்றிப் பல புத்தகங்களை உருவாக்கி வருகிறார்கள். அவர் பெற்றிருக்கும் கவனத்திற்கு, முன்பு வெளிவந்தவைபோல் கட்டுரைகள் மட்டுமே இன்று போதுமானவையாக இல்லை. மிகக் குறுகிய காலத்தில் நான்கு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன : தொ. மு. சி. ரகுநாதனின் புதுமைப்பித்தன் கதைகள் : சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும், எம். வேதசகாயகுமாரின் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், ராஜ் கௌதமனின் புதுமைப்பித்தன் எனும் பிரம்ம ராக்ஷஸ், அ. ராஜ மார்த்தாண்டனின் புதுமைப்பித்தனும் கயிற்றரவும்.

இவ்விமர்சன நூல்கள் வெளிவருவதற்கு முன்பு ஆ. இரா. வேங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தனின் 'அன்னை இட்ட தீ அவரைப்பற்றிய விமர்சன எண்ணங்களைப் புதுப்பித்துக்கொள்ளப் பலரையும் தூண்டிற்று எனலாம். சூழல் புதுமைப்பித்தன்மீது கொண்டுள்ள புதிய கவனத்திற்கு இந்நூலும் ஒரு பங்காற்றியது என்று நினைக்கிறேன்.

ஒரு படைப்பாளியைப் பற்றி விமர்சன நூல்கள் வெளிவருவது புதிய

நிகழ்வொன்றும் அல்ல. பாரதியைப் பற்றி எண்ணற்ற நூல்கள் வந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய விமர்சனத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓரிருவரில் பாரதியும் ஒருவன். ஆனால் பாரதியைப் பற்றி வெளி

33