பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளை நோக்கிக் கைகளை விரித்தான். ஜயாவின் மார்பு அவன் மார்பில் விழுந்தது. அவளுடைய கரங்கள் அவன் கழுத்தைச் சுற்றின.

அடுத்த கணம் நிலைமையை அறிந்து இருவரும் விலகினார்கள். ஜயாவின் முகம் நாணத்தால் சிவந்தது.

"ஜயா!"

"கிட்டு!"

ஜயாவிற்கு முகம் அவனுடைய மார்பில் மறைந்தது. அவளை வாரியெடுத்துத் தனக்குச் சொந்தமாக்கினான். அவள் அவனைத் தன்னுள்ளத்தில் சிறை செய்தாள்.

"நாளைக்கு உன் அப்பாவிடம் கேட்போம்" என்று கிட்டு சொன்னதும் ஜயாவின் கனவு பாழானதுபோல், அவளுக்குப் பட்டது.

அவன் அஞ்ஞானி! அவள் கிறிஸ்தவப் பெண்.

5

அம்பியும் கிட்டுவும் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது எத்தனை தடவை 'டூ' விட்டுக் கொண்டார்கள் என்று அம்பிக்கு ஞாபகம் இல்லையானாலும் இந்த மாதிரி எதிர்பாராதவிதமாய், எதிர்பாராத காரணத்திற்காகப் பெரும் சண்டையிட்டுக் கொள்ளுவோம் என்று அவன் நினைக்கவேயில்லை. அதிலும் தன்னுடைய அண்ணன் இப்படி இருப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை. ஆதலால், அம்பிக்கு அவனுடன் பேசவே மனமில்லை. இருவரும் ஒன்றாக வீட்டிற்குச் செல்லும் வழக்கம் நின்றது.

இது கிட்டுவிற்கு ஒரு விதத்தில் நன்மையாகவே இருந்தது. அவன் சென்ற பிறகு செல்வது என்ற காரணத்தை வைத்துக்கொண்டு ஜயாவை அடிக்கடி சந்திக்க வசதி ஏற்பட்டது அவனுக்கு.

ஜயாவிற்கு அந்த முதல் உணர்ச்சியில் தன்னை மறந்ததாக, வீட்டிற்குச் சென்ற பிறகு நொந்துகொண்டாளாயினும் கிட்டுவை அடிக்கடி சந்திக்கவே, படிப்படியாக அவன் ஓர் அஞ்ஞானி என்ற எண்ணமும் அவள் தனிமையாய் இருக்கும்பொழுதும் தோன்றாமல் ஒழிந்தது.

கிட்டுவிற்கு 'இனிமேல்' என்ற நினைவு ஏற்படாதிருந்ததில் ஆச்சரியம் இல்லை. உணர்ச்சி விஷயங்களில் இனிமேல் என்ற பிரச்னையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள். தன்னை ஒப்புக்கொடுப்பது. தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண் மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்துவிடுகிறார்கள் அப்பெண்கள்.

சம்பவம் நடந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சாயந்தரம் இருவரும் சந்தித்தபோது, ஜயா பேச்சை அந்த விஷயத்தில் திருப்பினாள். "கிட்டு, நான் ஒன்று கேட்கப் போகிறேன். கோபித்துக்

புதுமைப்பித்தன் கதைகள்

345