என்ன ஆச்சரியம்!
ஒரு பிரம்மாண்டமான முதலை வாயைத் திறந்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது.
இருட்டில் தோன்றும் மயக்கமா?
இல்லை! இல்லை!
இரண்டு சரடுகள் வளையங்கள் போல் உயரேயிருந்து தொங்கவிடப்பட்டு, அவற்றின் உடே இம்முதலை புகுத்தப்பட்டு, உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
இருட்டின் கூற்றால் முதலில் சரடு தொங்குவது தெரியவில்லை நன்னய பட்டனுக்கு.
மெதுவாக அதை யணுகினான். இருட்டில் கால் இடறியது. ஜோதியாக ஒரு திரவ பதார்த்தம் உருண்ட பானையிலிருந்து வழிந்தோடியது. அதன் பளபளப்பு, கருங்கல் தளத்தைத் தங்க மெருகிட்டதுமல்லாது குகையையே சிறிது பிரகாசமடையச் செய்தது.
லாவகமாகப் பலிபீடத்தின் மீது ஒரு காலை வைத்து ஏறி நின்று, அவன் முதலையின் வாயை நோக்கினான். கண்கள் ஒளி வீசின; வாய் கத்தியால் வெட்டிவைத்த சதைக் கூறுபோல் தெரிந்தது. ஆனால் அதன்மீது சலனம் இல்லை, உயிர் இல்லை.
முதலையின் திறந்த வாயில் ஓலைச் சுவடிகள் போல் கட்டுகட்டாக என்னவோ இருந்தன.
நன்னய பட்டன் அவற்றையெடுத்தான்.
ஓலைச் சுவடிகள் போலில்லாமல் அவை மிகவும் கனமாக இருந்தன.
அவற்றை அப்படியே சுமந்துகொண்டு குகைக்கு வெளியே வந்தான்.
அச்சமயத்தில்தான் நன்னய பட்டனுக்குப் 'பூலோகத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை நேரம், ஜன்னி கண்ட நிலையில், உள்ளுக்குள் போராடும் பயத்தை அமுக்கி அந்தக் குகை இரகசியங்களைத் துருவிக் கொண்டிருந்தான்.
குழந்தை, ஒரு மர நிழலில் தவழ்ந்து விளையாடிக்கொண்டு சிறிது தூரத்தில் இரை பொறுக்கும் மைனாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
நன்னய பட்டனுக்கு சுயப் பிரக்ஞையாக - அதாவது, ஓடித்திரியும் எண்ணக் கோணல்களிலிருந்து யதார்த்த உலகத்திற்குக் கொண்டு வரும் ஒரு துருவ நட்சத்திரமாக - அக்குழந்தை இருந்தது.
அதைத் தூக்கி வைத்துக் கொண்டு கையிலிருந்து ஓலைச் சுவடியை அவிழ்த்தான். வெளிச்சத்தில் பிடித்து ஏடு ஏடாக வாசித்தான்.
முதலில் அவனது கவனம் அந்தச் சுவடிகளின் விசித்திரமான குணத்திலேயே தங்கியது. அப்பொழுதுதான் கருக்கிலிருந்து நறுக்கித்
புதுமைப்பித்தன் கதைகள்
361