பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதற்கு முன்னும் பின்னும் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் மூலமும் புதுமைப்பித்தன் படைப்புகளைப் படிக்கத் தூண்டுதல் பெற்ற வாசகர்களின் எண்ணிக்கை கணிசமானது என அனுமானிப்பதில் தவறில்லை. அத்துடன் துன்பப்படும் ஜீவராசிகள்மீது புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் ஆவேசம் கலந்த அக்கறை ரகுநாதனின் கருத்துகள் மூலம் அதிக அழுத்தம் பெற்றுள்ளது. இந்த நூலிலும் வெளியிலும் புதுமைப்பித்தனைப் போற்றும் முகமாக ரகுநாதன் உருவாக்கிய வாக்கியங்கள் தான் புதுமைப்பித்தன்மீதான இடதுசாரிப் பார்வைக்கே ஒரு மொழியை உருவாக்கித் தந்தன என்று சொல்லலாம். இந்த வாக்கியங்களின் கலைத்துப் போட்ட கோலங்களே பொத்தாம் பொதுவாகப் புதுமைப்பித்தனை ஒரு முற்போக்குவாதியாகச் சித்தரித்துக் காட்ட முயன்ற பலருக்கும் எடுத்த எடுப்பில் உதவிக்கு வந்து நின்றன. எழுத்திலும், வசீகரம் மிகுந்த தன் பேச்சுகள் வழியாகவும் புதுமைப்பித்தனைப் படிக்கத் தொடர்ந்து தூண்டிக்கொண்டு வருபவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் மொத்தப் படைப்புகளுமே புதுமைப்பித்தனைப் படிக்க முற்படும் வாசகனுக்கு அவர் எழுத்துகளுடன் ஒரு நல்லுறவை உருவாக்க உதவுபவைதான். அத்துடன் ஜெயகாந்தன் புதுமைப்பித்தனைப் பற்றி முன்வைத்துவரும் சுதந்திரக் கருத்துகளும் அரசியல் இயக்கம் சார்ந்த பார்வை கொள்ளும் அழுத்தங்களோ இறுக்கங்களோ அற்றவை.

புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவரைப் பற்றி ஒரு முழுமையான விமர்சனத்தை உருவாக்கியவர் க. நா. சுப்ரமண்யம். புதுமைப்பித்தனின் காலத்தைச் சேர்ந்த அவரது சகப் படைப்பாளிகளின் சிறுகதைகளையும் மனத்தில் வைத்து அவற்றில் தன்னிகரற்ற சிறுகதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன் தான் என்ற முடிவுக்கு அவர் வருகிறார். 'கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பதுபோல தமிழில், இந்த நூற்றாண்டில், வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம்' என்கிறார். இந்தியச் சிறுகதை எழுத்தாளர்களோடும் உலகச் சிறுகதை எழுத்தாளர்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் க. நா. சு.வுக்குப் புதுமைப்பித்தனின் சிறுகதைகள் முக்கியமானவையாகப் படுகின்றன. கு. ப. ரா. போன்ற எழுத்தாளர்களை இலக்கியத்திறன் கொண்டவர்களாகவும் புதுமைப்பித்தனை மேதமை கொண்டவராகவும் க. நா. சு .மதிப்பிட்டிருக்கிறார். புதுமைப்பித்தனை முதல் முறையாகப் படிக்க முற்படும் வாசகனுக்கு, க.நா.க. 'புதுமையும் பித்தமும்' என்ற தலைப்பில் ஐந்திணைப் பதிப்பக வெளியீடான 'புதுமைப்பித்தன் படைப்புகள்' முதல் தொகுப்புக்கு 1987இல் எழுதிய நீண்ட முன்னுரை மிகவும் உபயோகமானது.

புதுமைப்பித்தன் தமிழ்ச் சூழலில் பதினான்கு ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்: 1934இலிருந்து 1948வரை. இக்குறுகிய காலத்தை மனத்-

37