பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நீர் சொல்லுகிறதும் நல்ல யோசனைதான்; ஆனால் எனக்கு வாதமாச்சே! குளிர்ந்த ஜலத்தில் குளித்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதே! என்ன செய்யலாம்?"

"அப்படியானால் உடம்புக்கு ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிட வேண்டும். உங்கள் வேதாள உலகத்தில் வைத்தியர்கள் கிடையாதா?"

"எங்களுக்குத்தான் சாவே கிடையாது என்று பிரம்மா எழுதி வைத்துவிட்டானே! அதனாலேதான் வைத்திய சாஸ்திரத்தை நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை!"

"சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடும்; உடம்புக்கு நல்லது!"

"மறுபடியும் மறுபடியும் இப்படிச் சொல்லுகிறீரே! நான் சைவனாகித் தான் குடலே பலவீனமாகிவிட்டதே! வேறெ ஏதாவது மூலிகைச் சத்து இருந்தா சொல்லும்!"

"அப்படியானால் ஜஸ்டிஸ் ராமேசத்திடம் கேட்டுச் சொல்லுகிறேன். எனக்கு நேரமும் ஆகிறது; மேலும் இந்தக் காட்டிலே வழியும் தவறி விட்டது!" என்று சொல்லி எழுந்தேன்.

"நான் வேண்டுமானால் வழி காண்பிக்கிறேன் வாரும்!" என்று எழுந்தது வேதாளம்.

"துப்பாக்கியை எடுக்க வேண்டுமே?" என்றேன்.

"உமக்கு ஞாபகப் பிசகு அதிகமோ! தண்ணீரில் கால்பட்டாலே எனக்கு வாதஜுரம் கண்டுவிடுமே! இருந்தாலும் நீர் நல்லவராக இருக்கிறீர், உமக்காக..." என்று தண்ணீருக்குள் அந்தரடித்து, துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்தது.

கரையில் அதற்கு நிற்கக்கூடச் சக்தியில்லை. ஓட்டைப் பல்லும், கை கால்களும் வெடவெடவென்று ஆடின.

என் மேல் வேஷ்டியைக் கொடுத்துப் போர்த்திக் கொள்ளும்படி சொன்னேன்.

போகும் வழியில், "அந்தக் காலத்து வளமுறை எப்படி?" என்று பேச்சுக் கொடுத்தேன்.

முன்னே சென்ற வேதாளம், நின்று திரும்பி, "எனக்கு ராமன் கிருஷ்ணன் எல்லாரையும் தெரியும். அவாள் கூடப் பயந்துண்டுதான் இருந்தா. எனக்கு அவாளைச் சின்னப் பையனாக இருக்கும்போதே தெரியும். அவாள் எல்லாம் தைரியசாலிகள் தான். ராக்ஷஸன் என்றால் தொம்சம் பண்ணிடுவாள். ஆனால், எங்களைக் கண்டா எப்போதுமே நல்லதனமா பயப்படுவா. அந்தக் காலத்து மனுஷாள்தான் என்னங்கிறீர்! தைரியத்திலே அசகாய சூரர்கள்தான். ஆனால் அவாளுக்கு மட்டுமரியாதை எல்லாம் தெரியும். முன்னோர்கள் சொன்னபடி, தெய்வம், பேய், பிசாசு, பூசாரி என்றால் ஒழுங்காகப் பயப்படுவாள். உங்கள் சுந்தரமூர்த்தி நாயனார்தான் என்ன? அவரைக் கூட எத்தனை தரம் பயங்காட்டியிருக்கேன் தெரியுமா? அந்தக் காலத்திலேதான் எங்களுக்கு முதல்லே பிடிச்சது வினை. எங்கையோ

புதுமைப்பித்தன் கதைகள்

389