காலத்தின் அதிபனான, காலத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட யமதர்மராஜன் நடுநடுங்கினான்.
“நான் தான் யமதர்மராஜன்!” என்று அவனது வாய் உளறியது. பயப்பிராந்தியில் வாய் உண்மையைக் கக்கியது. ஆனால் அந்த உண்மை கிழவியின் உள்ளத்தை பயத்தை ஏற்படுத்தவில்லை.
“குடிச்சுப்பிட்டுத்தான் வந்திருக்கே... ஒங்க பாட்டன் குடிச்சுக் குடிச்சுத்தான் தொலைஞ்சான்... அதான் வெள்ளக்கோயில் குடிசை! நாசமாப் போரத்துக்கு நாலு வளி வேணுமா? விதி யாரை விட்டுது...?” என்றாள்.
விதியைப் பற்றி நினைத்ததும் கிழவிக்கு என்றுமில்லாத தளர்வு தட்டியது... மூச்சுத் திணறியது... யமனுக்குக் கால்களில் தெம்பு தட்டியது... விதிக்கோலைப் பற்றித் தன் ஆட்சியை நிலைநாட்ட நிமிர்ந்தான்...
“ஏலே... ஒன் வக்கணையெல்லாம் இருக்கட்டுமிலே, என்னா, எருமை அத்துக்கிட்டு ஓடுது? மறிச்சுப் பிடிச்சா?” என்றாள் கிழவி.
‘ஏதேச்சையாக அலைந்த வாகனத்தைக் கட்டிப் போட்டுப் பருத்தி விதை வைத்தால் நிற்குமா?’ என்று நினைத்துக் கொண்டே, வெளியேறி வந்து சமிக்ஞை செய்தான் யமன். வாகனம் வந்து மறைவில் அவன் சொற்படி நின்றது.
எருமையின் முதுகில் போட்டிருக்கிற பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தான் யமன். பாசத்தால் அவளைக் கட்டிவிடலாம் என்று நம்பினான். பாவம்!
“ஏலே, கயிறு நல்லா உறுதியாக இருக்கே, எங்கலே வாங்கினே? ஒங்க பாட்டனிருந்தாருல்லே, அவருக்கு அப்பங்க காலத்துலேதான் இது மாதிரி கெடைக்கும். அங்கென சுத்தி ஒரு கொடியாக் கட்டிப் போட்டு வய்யி, ஒண்ணுக்குமில்லாட்டா நாலு ஓலையையாவது சேத்துக் கட்டிக்கிட்டு வரலாம்!” என்றாள்.
பாசக் கயிற்றின் நுனியைக் கூரையைத் தாங்கும் விட்டத்தில் கட்டிக்கொண்டே, நான் அவள் பேரன் அல்லன் என்பதை இந்தக் கிழவிக்கு எப்படித் தெளிவுபடுத்துவது என்று எண்ணியெண்ணிப் பார்த்தான். தனது சுய உருவைக் காண்பித்தால் பயந்துவிட்டால் என்ன செய்வது என்றே நினைப்பு... வேறு வழியில்லை...
“ஏ, கிழவி, என்னை இப்படி திரும்பிப் பார்!” என்று அதிகாரத்தொனியில் ஒரு குரல் எழுந்தது.
கிழவி திரும்பிப் பார்த்தாள். கூரையின் முகட்டையும் தாண்டி, ஸ்தூலத் தடையால் மறையாமல் யமன் தன் சுய உருவில் கம்பீரமாக நிற்பதைக் கண்டான்.
“நீ யாரப்பா! இங்னெ எம் பேரன் நிண்டுகிட்டிருந்தானே, அவனெங்கே?” என்றாள்.
“நான் தான் யமன்! நான் தான் அவன்; உன் பேரனில்லை!” என்றான் யமன்.
404
காலனும் கிழவியும்