பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விதேசி வைத்தியசாலை 'வடிகால்களில்' ஓடின. ஆகையால், பாஸ் செய்வதற்கும் உத்தியோகம் பார்ப்பதற்கும் அவ்வளவாகச் சிரமமில்லாதிருந்தது. மேலும் வெள்ளைக்காரர்கள் தங்கள் வைத்திய சாஸ்திரத்தைப் பிரசாரம் செய்வதிலேயே ஊக்கங் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ விசுவநாத பிள்ளை படித்துத் தேறி, பணம் சம்பாதித்தது ஒரு பெரிய வசன காவியம்; அதற்கு இங்கு இடமில்லை. ஆனால், அந்தப் 'பிணமறுக்கும் தொழில்' அவரை நாஸ்திகராக்கிவிடவில்லை. அவருக்கு 'மெடீரியா மெடிகா'வில் எவ்வளவு அபார நம்பிக்கையோ, அவ்வளவு சைவ சித்தாந்த நூல்களிலும் உண்டு. சிவஞான போதச் சிற்றுரையும், 'ஸ்டெதாஸ்கோப்'பும், உத்தியோக காலத்தில் அபேதமாக இடம்பெற்றன. மேலும் திருநீறு முதலிய புறச் சின்னங்களின் உபயோகத்தையும் அவர் நன்கறிந்தவர்.

ஸ்ரீ விசுவநாத பிள்ளை பொதுவாக நல்ல மனுஷ்யர். நாலு பெயரிடம் சுமுகமாகப் பேசிப் பழகக்கூடியவர். எடுப்பு, மாஜி சர்க்கார் உத்தியோகஸ்தர் என்ற மிடுக்கு, ஒன்றும் கிடையாது.

பிள்ளையவர்களின் குடும்பம் விசாலமானதன்று. பெரிய கட்டுக் கோப்பில் தம் வம்சம் விருத்தியாகி லோகத்தின் அஷ்ட திக்கிலும் சென்று ஜயக்கொடி நாட்ட வேண்டும் என்று அவர் ஆசை கொள்ளாதவர் என்பதை அவருடைய ஏகபுத்திரன் மிஸ்டர் கிருஷ்ணசாமி நிரூபித்தான். ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை - அதாவது 'சாலாச்சியம்மா' (விசாலாட்சியம்மாள்) - நிரந்தரமாக, பிள்ளையவர்களின் சலித்துப் போன வைத்தியத்திற்கும் மீறின வயிற்று சம்பந்தமான வியாதி உடையவள் என்பதை மத்தியானத்தில் மட்டிலும் அருந்தும் கேப்பைக் கஞ்சி எடுத்துக் காட்டுகிறது. சாலாச்சியம்மாள் பழைய காலத்து வேளாளக் குடும்ப நாகரிகத்து மோஸ்தர் பின்கொசுவம் வைத்துக் கட்டிய உடையுடனும், கழுத்து காதணிகளுடனும் வீடு நிறைந்து காட்சியளிப்பாள்.

மிஸ்டர் கிருஷ்ணசாமி அப்பாவின் வறுபுறுத்தலுக்காகப் 'பட்டணத்தில்' வைத்தியப் படிப்பில் தகப்பனார் சென்ற பாதையில் நம்பிக்கைகொள்ள முயலுகிறான்.

உயர்திரு. மருதப்ப மருத்துவனார் வாழ்க்கை இதே ரீதியில் செல்லவில்லை. மேடு பள்ளங்களைக் கண்டது. தலை நரைக்கும்வரை உழைப்பில் காய்த்துப்போன கை, காசு பணத்தை நிறையக் காணவில்லை.

அநுபவத்தின் கொடூரமான அல்லது இன்பகரமான சாயை விழாத, நம்பிக்கையும் நேசப்பான்மையும் நிறைந்த வாலிபப் பருவத்தில் குடிமகன் மருதப்பன் தூத்துக்குடியில் கொழும்புக்குக் கப்பலேறினான். திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களிடை கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள். உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையேதான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்ற அர்த்தம். மருதப்பன் நம்பிக்கையும் மேற்சொன்ன விதத்தில்தான்.