பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை. இந்தச் சாதனை சார்ந்த வீச்சு சென்ற நூற்றாண்டில் அவருக்கு மட்டுமே உரித்தானது. வாழ்வில் பெறும் எல்லா அனுபவங்களையும் படைப்புக்குரியதாய் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை தன்னளவில் பிரச்சினையேதும் தராததுதான். ஆனால் அந்த நம்பிக்கை சார்ந்த செயல்பாடு மிகக் கடினமானது. இந்தச் சவாலைத் துணிந்து ஏற்றவர் புதுமைப்பித்தன். தன் ஆக்கங்களின் தோல்வியை எண்ணி அஞ்சும் படைப்பாளியால் இந்தச் சவாலை ஏற்க முடியாது. புதுமைப்பித்தனுக்குப் படைப்புகளில் கூடிவரும் நிறைவைவிடப் புதிய சோதனைகள் தனக்கும் மொழிக்கும் தரும் ஆற்றல்கள்தான் முக்கியமானவையோ எனச் சந்தேகம் கொள்ள இடமிருக்கிறது. அந்த அளவுக்கு அவரது படைப்புகள் முழுமையை நோக்கமாகக் கொள்ளாத சரிவுகளுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்நிலைப்பாடு பற்றிய சுயப் பிரக்ஞை இருந்ததால்தான் தன் கதைகளை அவர் 'பரிசீலனைகள்' என அழைத்தார் (02.12.1945 தேதியில் மீ.ப. சோமுவுக்கு எழுதிய கடிதம்).

வாசிப்பும் ஒரு அனுபவம்தான். புதுமைப்பித்தன் வாசிப்பில் ஆங்கிலம் சார்ந்தும் சமகால இலக்கியம் சார்ந்தும், பழந்தமிழ் சார்ந்தும்- மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை அவரது சகப் படைப்பாளிகள் உறுதி செய்திருக்கின்றனர். வாசிப்பிலிருந்து அவர் பெற்ற பாதிப்பும் திரட்டிக்கொண்ட அறிவுகளும் செய்திகளும் அவரது எழுத்தை நவீனக் காலத்துக்குரியவையாக மாற்ற உதவியிருக்கின்றன. மேற்கத்திய அறிவு சார்ந்த கீற்றுகளும் நம் பண்டைய படைப்புகள் சார்ந்த மின்வெட்டுக்களும் அவர் எழுத்தில் விரவி வருகின்றன. தீவிரப் படைப்பாளிகள் வாசிப்பில் கொள்ளும் ஆர்வம் அபூர்வமானது அல்ல. ஆகவே, புதுமைப்பித்தனின் வாசிப்பை நாம் அதிகம் அழுத்த வேண்டியதில்லை. வாசிப்புச் சார்ந்த ஆர்வம் ஒருபக்கம் இருக்க, மிகக் குறைவான வாசிப்பிலிருந்துக்கூட மிக அதிகமான விஷயங்களை உறிஞ்சிக் கொள்ளும் அவருடைய உணர்வுகள் மிகக் கூர்மையானவை. வாசிப்பில் பேய் வெறி கொண்ட க.நா.சு. புதுமைப்பித்தனின் வாசிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் தானும் அவரும் படித்த ஒரு நூலிலிருந்து தன்னைவிட அவர் பெற்றுக்கொள்ளும் விஷயம் அதிகம் என்று பொருள்படக் கூறியிருக்கிறார் (புதுமையும் பித்தமும்,1987). இந்தத் தகவல் ஒரு நுட்பமான செய்தியைத் தருகிறது.

வாசிப்பு முக்கியமானதுதான். கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் குறைவு என்றால் வாசிப்பு தன்னளவில் எதையும் தந்துவிடுவதில்லை. அதிக வாசிப்பு அதிகக் குழப்பத்தையும் தரக் கூடும் என்பதற்கு உதாரணமாக நம்மிடையே இன்று பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கற்கும் நூல்களைத் தெளிவுறக் கற்பதும் கற்காதவற்றையும் கற்றவை சார்ந்து கற்பனை செய்துகொள்வதுமே படைப்பாளியின் இயல்பு. இந்த இயல்புதான் புதுமைப்பித்தனுக்குப் படைப்பாளியாகக் கை கொடுத்திருக்கிறது. முற்றிலும் அறியாதவற்றைப் பற்றி மௌனம் சாதிப்பதும் விவேகமான படைப்பாளியின் இயல்பாகும். தி.ஜானகிராமனின் கதைகளில் இசையின் நாதங்கள் அடிக்கடி கேட்பதையும் புதுமைப்பித்தன்

40