பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைகளில் இசையைப் பற்றிச் சொல்ல நேரும்போது அவர் சட்டென்று தாண்டிச் சென்றுவிடுவதையும் கவனிக்கலாம்.

பெரும்பான்மையான மக்கள் உண்டு, உடுத்து, தன்மானத்துடன் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். சாதாரண வாழ்க்கையே மனநிறைவைத் தரும் வாழ்க்கையாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர் புதுமைப்பித்தன். இவ்வளவு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கொண்ட மக்களுக்குக்கூடக் கூடிவராத வாழ்க்கைதான் புதுமைப்பித்தனைப் பெரிய அளவில் சங்கடப்படுத்தியிருக்கிறது. 'சாதாரண வாழ்க்கையைச் சென்றடைய முடியாத சாதாரண மக்கள்' என்ற தலைப்புக்குள் அவரது பெரும்பான்மையான கதாபாத்திரங்களை அடக்கிவிடலாம்.

புதுமைப்பித்தனின் படைப்புகள் மூலம் நம் மனத்தில் உருவாகிவரும் உலகின் வீச்சு மிகப் பெரிய அனுபவ உலகத்தை அவர் வாழ்நாளில் தேடிக் கண்டடைந்திருப்பதான தோற்றத்தை நமக்குத் தருகிறது. வாழ்வின் சகல நுட்பங்களையும் ரகசியங்களையும் அறிந்தவர் என்ற பிரமையையும் உருவாக்குகிறது. ஆனால் உண்மையில் புதிய மனிதர்களையும் பல்வேறுபட்ட துறை சார்ந்த அறிஞர்களையும் புதிய இடங்களையும் தன் வாழ்க்கைப் பின்னணிக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகளை அவர் அதிகம் பெற்றிருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர் வாழ்ந்திருந்த காலமே மிகக் குறைவு. மேற்கத்திய அளவுகோலின்படி பாதி ஆயுள். அவர் பிறந்த வருடத்தில் - 1906 - பிறந்தவர்கள் ஒரு சிலரேனும் இன்றுகூட நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்.

புதுமைப்பித்தனுக்குப் பரிச்சயமான இடங்கள் என்று செஞ்சி, திண்டிவனம், திருநெல்வேலி, சென்னை, பூனா ஆகிய ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். பிள்ளைப் பிராயத்திற்குப் பின் அவர் நன்கு அறிய நேர்ந்த இடங்கள் இரண்டுதான். ஒன்று நெல்லை. மற்றொன்று சென்னை. அவர் பயணம் செய்த வாகனங்கள் ரயில், பஸ், டிராம் ஆகியவையே. சைக்கிள் ஓட்ட அவருக்குத் தெரியுமா என்பதுகூட நமக்குத் தெரியாது. சென்னைக்குள் மாறி மாறிப் பல இடங்களில் அவர் குடியிருந்திருக்கிறார். சென்னையில் பணி செய்த இடங்களுக்கு மேலாக ஒரு சில நண்பர்களின் வீடுகள், நல்ல காப்பி கிடைக்கும் ஹோட்டல்கள், பழைய புத்தகங்களோ புதிய புத்தகங்களோ கிடைக்கும் கடைகள் ஆகியவையும் அவருக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரிகிறது: விரல் விட்டு எண்ணக்கூடிய நண்பர்களே அவருக்கு இருந்திருக்கிறார்கள். இவ்வாறு சிந்தித்துக்கொண்டு போகும்போதும் சரி, நவீன எழுத்தாளர்கள் இன்று பெற சாத்தியப்பட்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் சரி, புதுமைப்பித்தன் அறிய நேர்ந்த உலகம் மிகச் சிறியதுதான். இந்தச் சிறிய உலகத்திலிருந்துதான் அவர் ஒரு மிகப் பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். ஒருபிடி விதையிலிருந்து ஒரு கானகம் தோன்றுவது மாதிரி இது. சதா விழிப்பு நிலையிலிருக்கும் படைப்பாற்றல் பெற்ற மனம்தான் இதைச் சாதித்துக் காட்ட முடியும்.

41