பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முக்கியமானது. ஒரு கணத்துக்குள் இருக்கின்றன பல கணங்கள். ஒரு முகத்துக்குள் ஒளிந்திருக்கின்றன பல முகங்கள். ஒரு அனுபவத்திற்குள் மறைந்திருக்கின்றன எண்ணற்ற அனுபவங்கள். ஒரு உறவு கட்டுகிறது பல உறவுகளை. உயர்வு, தாழ்வு என்ற பேதமில்லாமல் ஏற்க வேண்டியவை, விலக்க வேண்டியவை என்ற பாகுபாடு இல்லாமல் ஒழுக்கம், மதம், ஜாதி சார்ந்த இலக்கணங்களில் மனிதர்களைப் பிரிக்காமல் அனைத்தும் அறிய வேண்டியவையே என்றும், அறிந்த அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டியவையே என்றும், கலை, வாழ்க்கையைப் பரிசீலிப்பதற்கான ஒரு சாதனம் என்றும், அதற்கு மேல் அந்தச் சாதனத்துக்கு எந்தப் புனிதமும் இல்லை என்றும் புரிந்துகொண்டிருந்த மனம் செயல்பட்ட விதம் இது. அறிந்த உலகம் குறுகியதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறுகிய உலகத்திலிருந்து கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்து அறிந்துகொண்ட அனுபவங்கள் மிகப் பெரியவை.


புதுமைப்பித்தன் என்னும் படைப்பு ஆளுமையைப் பற்றி நினைவு கூர்ந்துகொண்ட அளவில் இப்போது புதுமைப்பித்தனின் படைப்புக்குள் நாம் போகலாம். நாம் இங்கு பரிசீலிக்க முயல்வது முக்கியமாக அவருடைய சிறுகதைகளையே. அவற்றில் வெளிப்படும் ஆற்றலைப் புரிந்துகொண்டோம் என்றால் ஒருவிதத்தில் அவரது மொத்தப் படைப்பாற்றலையும் புரிந்துகொண்டதுபோல்தான். முதலில் ஒரு சுற்றில் அவர் சிறுகதைகளில் வெளிப்படும் பொதுக் குணாம்சங்களைத் திரட்டிக்கொள்ள முயலலாம்.

புதுமைப்பித்தனின் படைப்புலகத்துக்குள் முதலில் காலடி எடுத்து வைக்கும் வாசகனைக் கவர்வது அவரது மொழி. அவரது மொழி, சுயமானது ; அவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றெல்லாம் நாம் கூற விரும்புகிறோம். மண்ணில் பிறந்து விழுந்த குழந்தை அதன்பின் கற்றுக்கொள்வதெல்லாம் அதன் வாழ்க்கைச் சூழலிலிருந்துதான் என்ற நியதியை மறந்து நாம் புதுமைப்பித்தனைப் பற்றிப் பேச முடியாது. சில சமயம் பெற்றுக்கொள்பவற்றை ஒரு ஆளுமை மாற்றும் விதம் பெற்றுக் கொள்ளப்பட்டவற்றின் மூலங்களையே கண்டுபிடிக்க முடியாமல் அடித்துவிடுகிறது. புதுமைப்பித்தனோ பெரிய ரசவாதி. இருப்பினும் வீராசாமிச் செட்டியார் (விநோத ரசமஞ்சரி), அ. மாதவய்யா (பத்மாவதி சரித்திரம்) ஆகியோரின் வசன நடையின் பாதிப்பு அவரிடம் நிழலாடுவதை உணர முடிகிறது. ஆங்கில வாக்கியங்களின் அழகில் ஈர்க்கப்பட்ட மனத்தால் அவர் பல தமிழ் வாக்கியங்களை இதமாக உருவாக்கியிருக்கிறார். (சுப்புவய்யரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர் போனதல்ல. கலியாணி). மொழியின் மரபில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவ்வாக்கியங்கள். முதலில் சற்று விலகி நின்றன என்றாலும் பின்பு வித்தியாசம் காட்டாமல் தமிழில் கரைந்துவிட்டன. மரபு மீறப்படுவதும் மீறப்பட்ட மரபின் ஒருபகுதி மரபில் இணைந்து கொண்டு விடுவதும் மற்றொரு பகுதி உதிர்ந்து போய்விடுவதும் சமூக

நியதியாகவே இருக்கின்றன. அவரது நடையில் அவருடைய ஆளுமை

42