பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிப்படும் கோலங்கள் நூதனமானவையாகவும் எண்ணற்ற வகை பேதங்கள் கொண்டவையாகவும் வெளிப்படுகின்றன. எழுத்து மொழியின் பாதிப்பைப் பெற்றிருந்த அளவுக்கு அவர் பேச்சு மொழியின் பாதிப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார். இதன் பொருள் மொழி உருவானதில் அவரது கண் ஆற்றிய பங்கை அவரது செவியும் ஆற்றியிருக்கிறது என்பதுதான்.

நெல்லைப் பேச்சில் புரண்டு வலுவேற்றிக்கொண்ட சொற்கள் அவர் நடையில் விரவி வருகின்றன. பேச்சுத் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கும் பண்டைத் தமிழ்ச் சொற்களையும் பழக்கத்திற்கு வந்துவிட்ட சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகள் சார்ந்த சொற்களையும் அவர் சேர்த்துக்கொண்டு தன் மொழியை வலிமைப்படுத்துகிறார். இது உண்மையில் ஒரு ஜனசமூகத்துக்குப் படைப்பில் இடம் தந்து அவர்களது இருப்பை மண்ணில் உறுதிப்படுத்துவதாகும். படைப்பு சென்னைத் தமிழிலோ அல்லது தஞ்சைத் தமிழிலோதான் சாத்தியம் என்ற அன்றிருந்த மயக்கத்தை உடைத்த தமிழ் இது. மொழியைப் பண்டிதர்களின் சிறைச்சாலைகளிலிருந்து விடுவித்து மக்களுக்குச் சொந்தமாக்கும் பெருமுயற்சியில் பாரதிக்கு ஈடான சாதனை இது. மொழி எந்தளவுக்கு மனித மனங்களுடன் நெருங்குகிறதோ அந்தளவுக்குத்தான் அது படைப்பு மொழியாக உயிர்ப்பு கொள்கிறது என்ற உண்மையின் வற்புறுத்தல் இது. 'செல்லம்மாள்' சிறுகதையில் செல்லம்மாள் 'அது சதிதான்; இப்பவே சொன்னாதானே அவுஹ ஒருவளி பண்ணுவாஹ' என்கிறாள். இந்தக் கொச்சை அன்று தந்திருக்கக்கூடிய அதிர்வை இன்று நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகைப்பும் அதற்குப் பின் கவர்ச்சியும் அதற்குப்பின் அங்கீகாரமும் பெறுகிறது இது. அன்றைய பிராமணக் கொச்சைக்கு வேறுபட்ட தனக்குரிய கொச்சையைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தும்போது அவர் படைப்பாளியை நோக்கி விடுக்கும் செய்தி முக்கியமானது: 'நீ உன் தமிழைப் பயன்படுத்தும் சுதந்திரத்தில் திளை. இந்தச் சுதந்திரம்தான் உன்னை உறுதிப்படுத்துகிறது' என்பதுதான். அவரது செயல்பாடு உருவாக்கிய சுதந்திரப் பாதையில் நடைபோட்ட எண்ணற்ற படைப்பாளிகள் கடந்த அறுபது வருடங்களில் பல வண்ணங்களும் கோலங்களும் நூதனங்களும் கொண்ட எவ்வளவோ சொற்களையும் வாக்கியங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் தந்து தமிழை வாழும் மொழியாக உறுதிப்படுத்திக்கொண்டு போகிறார்கள். எண்ணற்ற மீறல்களையும் அழிப்புகளையும் இன்றைய படைப்பாளி வைதீகத்தினுடையவோ பண்டிதத்தினுடையவோ இருப்பு சார்ந்த ஓர்மைகூட இல்லாமல் சரமாரியாகப் பயன்படுத்துகிறான் என்றால் அவை புதுமைப்பித்தனுடையவும் புதுமைப்பித்தனால் பாதிக்கப்பட்டவர்களுடையவும் செயல்பாடுகளின் விளைவு என்பதை உணர வேண்டும்.

வெவ்வேறு காலங்களுக்குரிய செய்திகளை ஒரே வாக்கியத்தில்

இணைப்பதும் பழமையான செய்தியை ஒட்டி ஒரு புத்தம் புதிய செய்தியை இணைப்பதும் அவருக்குக் கைவந்த கலை. அவரது எழுத்தில் வெகு தீவிரமான சிந்தனைகளும் தெறிப்புகளும் அநாயாசமாக வெளிப்படுவது நம்மைக் கவர்கிறது. நடையில் நிகழ்த்தும் ஜாலங்-

43