பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டாம் - நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா? வெள்ளைக்காரர் 'ஸ்லேவ் ஐலண்ட்' என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ? வடலூர் குமாரு பிள்ளையின் மனம் பிச்சை எடுக்க ஒப்பவில்லை. அதனால்தான் அப்படிப்பட்ட சட்டம் அங்கிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல் போய்விட்டது.

வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம். இந்த உண்மையைப் பிரிட்டிஷ்காரர் மட்டிலும் தெரிந்துகொண்டிருக்கவில்லை; கொழும்புப் பிள்ளைமாரும் தெரிந்து கொண்டிருந்தனர். ராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் யானைக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்பொழுது அதன்மீது ஊரும் எறும்புக்கும் அது கிடைக்கும் அல்லவா? அதனால் வெள்ளைக்காரனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் தம் நம்பிக்கையைப் போட்டுவிட்டு, பக்தி விஷயத்திற்காக மட்டிலும் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலைக் கட்டி அதற்குப் பக்கத்தில் கிணறு ஒன்றையும் வெட்டிப் போட்டார்கள். பெரிய முதலாளிமார்கள் தர்பாராக வந்து, கடைச் சிப்பந்திகள் தண்ணீர் இறைத்து ஊற்ற, குளித்துவிட்டுப் பிள்ளையாரை அவரவர் உயர்வு ஏர்வைகளுக்குத் தக்கபடி வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு, டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகிவிடவில்லை. அதிகாலை ஏழு மணிக்கு அந்தப் பகுதியில் நோக்கும் திசை எல்லாம் 'நடமாடும் கோயில்கள்' தாம். பிள்ளையார் கோயிலின் நைவேத்திய விசேஷங்கள் சிறிய சிப்பந்திகளிடையே பக்திக் கவர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தது.

வடலூர்ப் பிள்ளையும் சித்தி விநாயகர் பக்கத்தில் கோயில் கொண்டருளினார். பிள்ளையார் மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ள, எனக்குத் தேவதையின் மனோதத்துவ சாஸ்திரம் தெரியாது. பிள்ளையவர்கள் மனசில் மட்டிலும் கசப்பு, கசப்பு, கசப்பு. கோயில் ஐயர் ஒரு நாளைக்கு மட்டிலும் ஏதோ கொடுத்தார். அதில் அவர் மனசு அபார மகிழ்ச்சி கொண்டுவிடவில்லை. மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல.

440

நியாயந்தான்