பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதைச் சீக்கிரம் செய்து முடிப்பதைப் பொறுத்தது. ஒரு வினாடி அதிகமானால் இளவரசருக்குப் பிரேதப் பெட்டியை ஆர்டர் செய்ய வேண்டியதுதான்... ஆனால், விசுவநாத் கைகள், வேலையை குறைந்த நேரத்திற்கும் பாதியளவிலேயே செய்து முடித்தன. இப்பொழுது, அவர் சௌகரியமாகப் பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருப்பதற்கு டாக்டர் விசுவநாத்தான் காரணம்.

சென்ற ஜெர்மன் சண்டையில் பேஸ்காம்புகளில் உழைத்ததினால், ஆப்பரேஷன் கத்தியை வைத்துக் கொண்டு யமன் வரவைத் தடுக்க, டாக்டர்கள் தப்பு வழி என்று சொல்லக்கூடிய முறைகளில் எல்லாம் பரிசீலனை செய்ய இவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது.

டாக்டர் வில்க்கின்ஸன் இவரது சகா. அவரது அந்தரங்க அபிப்பிராயம் மற்ற இந்தியர்களைப் பற்றி என்னவாக இருந்தாலும், டாக்டர் விசுவநாத்திடம் கருப்பன் என்ற பிரக்ஞை யில்லாமலே பழகி வந்தார். நாஸ்திகத்தின் பேரில் இருவருக்கும் இருந்த அபார பக்தி இந்த நெருக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம். முப்பத்து முக்கோடி கருப்புத் தேவாதி தேவர்களும், மூன்றே மூன்று வெள்ளைத் தெய்வங்களும் இவர்களது கிண்டல்களை இரண்டு நாட்கள் கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்தால், இவர்கள் கண் எதிரிலேயே தூக்குப் போட்டுக் கொள்ளும். ரூபமற்ற தெய்வங்களுக்கு அப்படிப்பட்ட அடி!

அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு வரப்பட்டவன் ஒரு ஹடயோகி; விஷயங்களையும் கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரிலும் தின்று சாகாதவன். சித்தாந்தச் சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்.

அவன் ஏதோ திடீரென்று பிரக்ஞையற்றுக் கிடக்கிறான் என்று தகவல் கிடைத்ததும், ஆம்புலன்ஸ் காரை அனுப்பி சத்திரத்திலிருந்து அவனை எடுத்து வரச் செய்ததும் இவர்தான். ஹடயோகியின் உட்புறம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இருவருக்கும் இருந்த ஆசை அளவில்லை. எக்ஸ்ரே பரீக்ஷையில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே. ஹடயோகி ஏதோ முறை தப்பிச் செய்ததின் விளைவு.

சித்தாந்தச் சாமிக்கு இரண்டு ஸ்பெஷல் நர்ஸ்கள்; மூன்று மணி நேரத்திற்கு ஒரு தரம் டாக்டர் பரிசோதனை எல்லாம்...!

மறுநாட் காலையில் டாக்டர் வில்க்கின்ஸன் கேட்ட செய்திகள் அவரைத் திடுக்கிட வைத்தன. ஒன்று, ஆஸ்பத்திரியில் கிடத்தப்பட்டிருந்த சித்தாந்த சாமியைக் காணோம் என்பது. மற்றொன்று, டாக்டர் விசுவநாத் காஷாயம் வாங்கிக் கொண்டார் என்பது. முதல் விஷயத்தில் டாக்டர் வில்க்கின்ஸனுக்கு அவ்வளவு சிரத்தையில்லை; அது போலீஸ் கேஸ். டாக்டர் விசுவநாத்திற்கு மூளைக் கோளாறுதான் ஏற்பட்டிருக்-

புதுமைப்பித்தன் கதைகள்

445