பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது அவர் டவுனில் 'பிஸினஸ்' பண்ணுகிறார் (தொழில் மாறவில்லை - சந்துபாய் லல்லுபாயில் ஆடிட்டுக்கு கணக்கு 'தயார்' செய்வதுதான் - பெயர் மாறிவிட்டது). காலை ஒன்பது மணிக்கு சுந்துவின் வேகாத உருளைக்கிழங்கு சாம்பார் - விட்டமின் போகாதிருக்க - உள்ளும் உணர்வும் சுடும் ரஸம், அதற்கெதிர்த்த தன்மை படைத்த தயிர் இவற்றைக் கனவேகமாக உள்ளே செலுத்திவிட்டு கனவேகமாக செகண்ட் க்ளாஸில் - பாஸ் வாங்கியதன் பயனாக - நின்றுகொண்டே பீச் ஸ்டேஷன் வரை யாத்திரை - இந்தப் பேறுகள் யாவும் ஸ்ரீமான் வி.வி.ராமனுக்கு.

இரண்டாயிரத்துச் சில்லறைக்கு மாறிய 'ஸ்ரீ நிவாஸ்' ரெடிமேட் செமண்ட் விஷயமானாலும் ஜப்பான் சரக்கைப் போல மினுக்குள்ளது. அதோடு எதிர் பங்களா மாஜி சுகாதார மந்திரி வசித்த இடம்.

ரங்கத்தின் சாந்தி ஏகமோக்களா. விசேஷ கலாபவனத்தில் மட்டிலும் பிரத்யேகமாகக் கீழைப் பிரதேச நாட்டியத் திறமையை விளக்கும் குமாரி பானுசுமதி - பங்கஜத்தின் பரத நாட்டியம். 'ஸ்ரீ நிவாசில்' கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? சாக்ஷாத் சர்க்கார் செக்ரடரியேட்டில் ஆயுளில் முக்கால்வாசியைக் கழிக்கும் பெரிய உத்யோகஸ்தர்கூட வந்திருந்தார். குமாரி பானுசுமதி - பங்கஜத்தின் நாட்டியமென்றால் சகாரா பாலைவனத்திலும் கூட அவரைப் பார்க்க முடியும் என்பது ஸ்ரீமான் வி.வி.ராமனுக்குத் தெரியாது.

குமாரி பானு... இத்யாதி இத்யாதிக்கு சங்கீதத்திலும் பிரபலம். பலர் 'சபாஷ்!' சொன்னார்கள். 'ஐயோ...!' நீட்டலாகச் சொல்லி நயத்தில் தெவிட்டி மகிழ்ந்தார்கள்.

"சங்கீதம் ஒரு சமுதாயத்தின் ஜீவநாடி!" என்றார் ஒரு மாஜி நீதிபதி நரைத்தலையை ஆட்டிக்கொண்டு.

"ஜீவநாடியின் துடிதுடிப்பு என்று சொல்லுங்கள் சார்!" என்றார் சகாராவுக்கும் துணியும் தீர உத்யோகஸ்தர். 'மனமாகிய மாயையிலே அருளாகிய கோவிலிலே'

என்பதற்கு அபிநயம் பிடித்தாள் குமார் பானுசுமதி இத்யாதி.

"நாட்டியம் என்றால் குமாரி, குமாரி என்றால் நாட்டியம்" என்று சொன்னார் விசேஷ கலாபவன நிரந்தர பிரஸிடண்ட்.

"ஆர்ட்ன்னா கலை, கலைன்னா ஆர்ட்" என்றார் தமக்கு இங்கிலீஷ் தெரிந்ததாக நினைத்துக் கொண்ட சங்கீத பூஷணம் பால கந்தர்வ தாதாசார்யார்.

"ஆஹா!" என்றார் அவரது பின்பாட்டுக்காரர்.

"என்னடா பாபு, சங்கீத பூஷணத்தை ரொம்ப நாளாக் கேட்கல்லியே, வர்ற சீசன்ல ஒரு ஸ்பெஷல் வீக் (வாரம்) ஒதுக்கிவிடு" என்று உத்தவரவு போட்டார் மாஜி நீதிபதியொருவர்.

456

அபிநவ ஸ்நாப்