பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தியோகமோ தனிப்பட்ட ஸ்தாபனத்தில். எத்தனை நாளைக்குத்தான் ரங்கசாமிக்காகக் காத்துக் கொண்டிருப்பான் எஜமான்? வேலையும் போய் விட்டது. சுமை முழுவதும் என்மேல் விழுந்தது...!

அவள் முதலில் எனது உதவியை சங்கோஜத்துடன் ஏற்றாள். பிறகு 'அண்ணா! அண்ணா!' என்று கூப்பிட்டு மனதைத் திருப்தி செய்து கொண்டாள்.

டாக்டர் வருவார்; மருந்து எழுதிக் கொடுப்பார்; உணவு எழுதிக் கொடுப்பார்! உயிரை உடலுடன் ஒட்டவைக்க அவரும் என்னென்னவோ வித்தை எல்லாம் செய்துதான் பார்த்தார்.

ரங்கசாமியைத் தூக்குவது, கிடத்துவது, அவனுக்கு வேண்டிய சிசுருஷைகளைச் செய்வது எல்லாம் நானும் அவளும்தான். அந்தத் தனியான வீட்டில் நானும் அவளுந்தான்... இதே நினைப்புத்தான், எப்பொழுதும் என்மனசில். உதவி செய்யும்பொழுது எங்கள் உடலும் தொட்டுக் கொள்ளும். எனக்குச் சுரீர் என்று விஷமேறும். அவளுக்கு எப்படியோ?

ராத்திரியில் வெந்நீர் ஏதாவது போடவேண்டுமென்றால், நான் அடுக்களை செல்லுவேன்; அவள் உடனிருந்து பார்த்துக்கொள்வாள்.

"அண்ணா என்னவோ போல் பார்க்கிறாரே!" என்ற ஓலம் கேட்கும். அடுப்பில் போட்டது போட்டபடி அங்கு ஓடுவேன். அவள் கணப்புச் சட்டியில் தவிட்டை வறுப்பாள். நான் வாங்கி ஒத்தடம் இடுவேன். நான் அவளையே பார்த்துக் கொண்டு பின்புறம் கை நீட்டும் பொழுது சில சமயம் என் கை அவள் கைவளையலில் படும்; அல்லது ஸ்தன்யங்களில் பட்டு விடும். அந்த ஒரு நிமிஷம் எனக்கு நரக வேதனைதான். அவளுடைய இளமையில் என் மனம் லயித்து நிற்குமே ஒழிய, அவளது சங்கடமோ, அவளது ஊசலோ எனக்குப் படாது. அச்சமயங்களில் நான் அவளைத் திரும்பிப் பார்த்ததில்லை.

அவள் அதில் படபடப்பைக் காட்டிக் கலவரத்தை உண்டு பண்ணிவிடவில்லை. பின் பலமுறை வேண்டுமென்றே தனியாக நாங்கள் நிற்கும்பொழுது அவள் மீது நான் பரீட்சை நடத்தியதுண்டு. ஆனால் பிரதிபலன் எதிர்ப் பிரதிபலிப்பற்ற பார்வைதான்.

நாலைந்து நாள் கழித்து நான் ஆபீசுக்குப் போகப் புறப்படும்பொழுது ரங்கசாமியைப் பார்க்க அவன்வீட்டுக்குள் போனேன். விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்துதான் என் ரூமுக்குத் திரும்பியிருந்தேன்.

முந்திய நாள் ராத்திரி ஒரு கண்டம். நடுநிசியில் டாக்டர் வந்தார். மருந்து கொடுத்தார்; தூங்கினால் விழிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் சென்றிருந்தார். காலை வரையில் ரங்கசாமி தூங்கவேயில்லை.

பார்லிக் கஞ்சியைப் போட்டு வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு நான் ரூமுக்குச் சென்றிருந்தேன்.


புதுமைப்பித்தன் கதைகள்

461