சாமியாரும் குழந்தையும் சீடையும்
"மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.
"இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.
"நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.
"இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?
"நிச்சயிக்க என்ன இருக்கிறது?..."
இப்படியாகப் பின்னிக்கொண்டே போனார் ஒரு சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புதுவெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது.
அவர் உட்கார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துறை என்று சொல்வார்களே அந்த ஊர். இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப் போல எண்ணக் குலைவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது. இப்பொழுதும், இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே. பலவீனத்தை வைத்துக்கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால் தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.
அதை இந்தச் சாமியார் அறிந்து கொண்டிருந்தார். அதனால்தான், இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்டபொம்மு சண்டையின் போது சமரசம் பேச
464
சாமியாரும் குழந்தையும் சீடையும்