பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கக் கோபத்தில் சமநிலையை இழந்துவிடுவதையும் நாம் பார்க்கலாம். அலமுவின் மார்பிலிருந்து கொட்டுகிறது ரத்தம். ‘'இந்த ரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ!'’ என்கிறாள் அவள் (வழி). பெண்களின் தத்தளிப்பையும் உணர்வுகளையும் முழுமையாக ஏற்று அவற்றுக்கு அழுத்தம் தருகிறார். ஒரு படைப்பாளியாக அவருக்கு ஆக அருவருப்பானது வக்கீல் வாதம்தான். ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வாதங்களைத் தொகுப்பது. ஆனால் பெண்களின் உணர்வுகளை மதிப்பதனாலேயே ஒரு நீதிபதியைச் சமநிலைப் பார்வை அற்றவர் என்று சொல்லிவிட முடியாது.

கலியாணி (கலியாணி), மருதி (துன்பக் கேணி), அம்மாளு (பொன்னகரம்), அகல்யை (சாப விமோசனம்), செல்லம்மாள் (செல்லம்மாள்), ஸரஸு(வாடா மல்லிகை), சங்கரிப் பாட்டி (பாட்டியின் தீபாவளி), லக்ஷ்மி (கோபாலபுரம்), திருமதி பால்வண்ணம் பிள்ளை (பால்வண்ணம் பிள்ளை), ராஜம் (இரண்டு உலகங்கள்), மீனாட்சி (கோபாலய்யங்காரின் மனைவி), ருக்மிணி (ஆண்மை), முறுக்குப்பாட்டி முத்தாச்சி (சங்குத் தேவனின் தர்மம்), மருதாயி (காலனும் கிழவியும்). ஜெயா (புதிய கூண்டு), பல கதைகளிலும் கமலா என்ற பெயரிலும் சாரதா என்ற பெயரிலும் வரும் மத்தியதர வர்க்க மனைவிகள் : இவர்களும் இவர்களைப் போன்ற பிற பெண் கதாபாத்திரங்களும் பொதுவாக ஆண்துணையின் ஆதரவு தரும் நம்பிக்கையைப் பெறாமல் தனிமையில் பரிதவிப்பது போன்ற சித்திரமே நம் மனத்தில் உருவாகிறது. துணை தரும் அதிசயமான ஆகவாசத்தைப் பெறுகிறவள் விதிவிலக்காகச் செல்லம்மாள் மட்டும்தான். காலனையே ஒரு கை பார்க்கத் துணிந்துவிட்ட கிழவி (காலனும் கிழவியும்) வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிமிர்ந்து நிற்பதில் வியப்பில்லை. பொதுவாக எல்லாப் பெண் கதாபாத்திரங்களும் உணர்ச்சியின் தளத்தில் தங்கள் இயற்கை தாய்மை சார்ந்து, பாலியல் உறவு சார்ந்து, குழந்தைகள் சார்ந்து, பிற ஆசைகள் சார்ந்து கசிவதைச் சங்கடத்துடன் எதிர் கொள்கிறார்கள். இவர்களில் ஒருத்திகூட வாழ்க்கை சார்ந்த பேராசை கொண்டவள் அல்ல. பெரும் கனவுகள் கொண்டவள் அல்ல. குடும்பம், அக்குடும்பத்தில் தங்கள் எளிய கனவுகள் நிறைவேறும் சூழல் இவ்வளவுதான் அவர்களுக்குத் தேவை. செல்லம்மாளுக்கு ஒரு கனவு இருக்கிறது. 'வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். வருகிறபோது நெல்லிக்காய் அடையும் முருக்க வத்தலும் எடுத்துக் கிட்டு வரணும்' இவ்வளவுதான். இந்த எளிய ஆசை கூட அவளுக்கு நிறைவேறவில்லை.

தனது சமநிலைப் பார்வை என்ற சுட்டெரிக்கும் வெயிலில் எல்லாக் கதாபாத்திரங்களையும் நீக்கமற, புதுமைப்பித்தன் காயப்போட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். இவ்வாறு நம்புவது அவர் காட்டும் பாவனைகளில் ஏமாந்துபோவதன் விளைவு. படைப்பாளியான அவர் நுட்பமானவராகவும் உணர்வுகளில் கூர்மை கொண்டவராகவும் எதிர்மறைகளில் இருக்கும் உண்மை பற்றிய உணர்வுகள் கொண்டவராகவுமே இருக்க முடியும். முழுத் தீமை என்று எதுவும் இல்லை. விஷமும் சிறிய அளவில் மருந்தே. இலக்கியம் சார்ந்து ஆழமற்ற அக்கறைகள்

47